நாட்டின் 15வது குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடைபெறவுள்ளது.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் வரும் 24ம் தேதியுடன் நிறைவடைகிறது. குடியரசு தலைவர் தேர்தலை தற்போது உள்ள குடியரசு தலைவரின் பதவி காலம் முடியும் முன்னரே நடத்தி முடிக்க வேண்டும்.
அதன்படி, இன்று குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை வரும் 21ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் ஜார்க்கண்ட் முன்னாள் ஆளுநர் திரெளபதி முர்மு குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இவரை எதிர்த்து எதிர்க்கட்சிகள் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுகிறார்.
மாநிலங்களவை செயலர் பிரமோத் சந்திர மோடி குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான தலைமை தேர்தல் அதிகாரியாக செயல்படுகிறார். எம்எல்.ஏ.க்கள் வாக்கு 5,43,231 மற்றும் எம்.பி.க்கள் வாக்கு 5,43, 200 என மொத்தம் 10,86,431 வாக்குகள் உள்ளன. மொத்தமாக 4,809 பேர் வாக்களிக்க உள்ளனர்.
குடியரசுத் தலைவர் தேர்தல் நாடாளுமன்ற வளாகத்திலும், மாநில சட்டமன்றங்களிலும் நடைபெறும். குடியரசுத் தலைவரை மக்களவை, மாநிலங்களவை, சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களித்து தேர்ந்தெடுப்பர். அதே வேளையில் நியமன உறுப்பினர்கள், MLC க்கள் வாக்களிக்க முடியாது.
ஒடிஸாவில் ஆளும் பிஜு ஜனதா தளம், ஆந்திரப் பிரதேசத்தில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தமிழகத்தில் எதிர்க்கட்சியான அதிமுக உள்ளிட்ட கட்சிகள் முர்முவுக்கு ஆதரவு தெரிவித்தன. எனவே, திரெளபதி முர்முவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

அதன்படி, குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றால் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவர் நாட்டின் குடியரசுத் தலைவர் ஆனார் என்று பெருமையை திரெளபதி முர்மு பெறுவார். மேலும், பிரதீபா பாட்டீலுக்கு பிறகு இரண்டாவது பெண் குடியரசுத் தலைவர் என்ற பெருமையையும் முர்மு பெறுவார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெறவுள்ள குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப் பதிவுக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. இந்த தேர்தலில் வாக்குப்பதிவுக்கு ஓட்டுச் சீட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பச்சை நிறத்தில் வாக்குச்சீட்டும். எம். எல்.ஏ.க்கு ‘பிங்க்’ நிற வாக்குச் சீட்டும் தரப்படும்.







