வேலூர் தங்க கோயிலில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சாமி தரிசனம்!

வேலூர் தங்க கோயிலில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சாமி தரிசனம் செய்தார்.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கேரளா, தெலங்கானா, ஆந்திரா ஆகிய இடங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன் தொடர்ச்சியாக, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று (டிச.17) காலை 11.20 மணியளவில் திருப்பதியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் வேலூர் ஸ்ரீபுரத்துக்கு வருகை தந்தார். வேலூர் ஸ்ரீபுரம் தங்கக் கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த ஹெலிபேட்டில் ஹெலிகாப்டர் வந்திறங்கியதும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை ஆளுநர் ரவி, மத்திய இணையமைச்சர் முருகன், தமிழக கைத்தறித் துறை அமைச்சர் காந்தி உள்ளிட்டோர் வரவேற்றனர்.

தொடர்ந்து, ஸ்ரீபுரம் தங்கக் கோயிலில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சாமி தரிசனம் செய்தார். பின்னர், அங்கு சுமார் ரூ. 5 கோடியில் கட்டப்பட்டுள்ள தியான மண்டபத்தையும் திறந்து வைத்தார். குடியரசுத் தலைவரின் வருகையையொட்டி, ஸ்ரீபுரம் கோயிலில் பொதுமக்கள் தரிசனத்துக்கு கட்டுப்பட்டுகள் விதிக்கப்பட்டுள்ளன.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வருகையையொட்டி, ஸ்ரீபுரம் தங்கக்கோயில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு, தமிழ்நாடு சிறப்பு பாதுகாப்புப் படை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஸ்ரீபுரம் தங்கக் கோயில் வளாகத்தில் 2 அடுக்கு பாதுகாப்புடன் ஸ்ரீபுரம் பகுதி முழுவதும் சுமார் 1000 காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.