ஜப்பானின் ஷிஷோகா மாகாணத்தில் நள்ளிரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவான நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன. இதனால், இரவில் வீடுகளில் உறங்கிக்கொண்டிருந்த மக்கள் பீதியடைந்து வீட்டை விட்டு வெளியே சாலைகளில் தஞ்சமடைந்தனர். ஷிஸுவோகா மாகாணத்தின் மேற்குப் பகுதியில் தரைமட்டத்தில் இருந்து சுமார் 40 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கத்தின் மையம் அமைந்திருந்தது.
மேலும் நிலநடுக்கத்தின் போது கட்டடங்களை விட்டு வெளியேற முயன்ற போது மற்றும் இடிபாடுகள் விழுந்ததில் குறைந்தது 22 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் இயக்கப்படும் அதிவேக புல்லட் ரயில்கள் தண்டவாள சேதங்களைக் கருத்தில் கொண்டு குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டு வருகின்றன.
நிலநடுக்கத்தின் போது வீடுகளும் பெரிய கட்டடங்களும் பலமாக ஆடும் காட்சிகளும், கடைகளில் பொருட்கள் சிதறும் காட்சிகளும் அடங்கிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.




