மின்வெட்டு விவகாரத்தில் மத்திய அரசை திமுக அரசு குறைகூறக்கூடாது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையிலுள்ள அமமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் தினகரன் தலைமையில், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார் தினகரன்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2024 நாடாளுமன்ற தேர்தலில் அமமுக போட்டி மக்களை சந்திப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது என்று குறிப்பிட்டார். ஆளுநர்தான் நியமனம் செய்யும் முறை உள்ளது, ஆனால் அரசே நியமனம் செய்யும் முடிவை திமுக அரசு எடுத்துள்ளது, 1999லிருந்து கூட்டணி ஆட்சியில் இருந்த போது எல்லாம் செய்யாமல் திராவிட மாடல் என்று கூறி தற்பொழுது செய்கிறார்கள், நடத்தட்டும் பார்க்கலாம் என்று கருத்து தெரிவித்தார்.
காவல்துறை விசாரணையின்போது விக்னேஷ் என்பவர் உயிரிழந்தது தொடர்பாக பேசிய தினகரன், பொதுவாக காவல்துறை நடவடிக்கை எடுக்கும்போது சில இடங்களில் அவப்பெயர்களை வாங்கிக்கொள்கிறார்கள், காவல்துறை பார்த்து செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும், மத்திய அரசை குறை கூறக்கூடாது. நாடாளுமன்றத்திலும் திமுக பெரும்பான்மை பெற்றுள்ளது, சட்டமன்றதிலும் மக்கள் அதிக பொறுப்பை வழங்கி உள்ளனர். அதை உணர்ந்து மின்வெட்டு பிரச்சனையை சரி செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.







