சிறு வயதில் பொன்னியின் செல்வன் சில அத்தியாயத்தைக் கிழித்து எறிந்து விட்டதாக கல்கி கிருஷ்ணமூர்த்தியின் பேத்தி கௌரி தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் பொன்னியின் செல்வன் முதல் பாகத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் பெரும்பாலான திரையரங்குகளில் இரண்டு வாரங்களுக்கான முன் பதிவு ஏற்கனவே நிறைவு பெற்றது.
மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் பொன்னியின் செல்வன் முதல் பாகம் திரைப்படம் செப் 30 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. ரூ.500 கோடி பட்ஜெட்டில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்த படம் முதல் நாள் மட்டும் உலகம் முழுவதும் 80 கோடி வசூல் செய்ததாக லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்நிலையில் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் பேத்தி கௌரி நீயூஸ்7 தமிழுக்கு அளித்த பேட்டியில்,“பொன்னியின் செல்வன் முதல் பாகம் அருமையாக உள்ளது. சிறு வயதில் பொன்னியின் செல்வன் சில அத்தியாயத்தைக் கிழித்து எறிந்து விட்டேன். 6 வயதில் பொன்னியின் செல்வன் முழு கதையையும் எனது மாமா படிக்க நான் கேட்டேன்.
கல்கி இந்த கதையை அணுகிய முறை எனக்கு மிகவும் பிடிக்கும். ராஜா ராணி கதை என்றாலும் சாதாரண மக்களை மாற்றி இதில் எழுதியுள்ளார். பூங்குழலி கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடிக்கும். தமிழ்நாடு, இலங்கை எனப் பல பகுதிகளுக்குச் சென்று பொன்னியின் செல்வன் கதையை எழுதினார். பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்” எனக் கூறினார்.







