பொங்கலை முன்னிட்டு சொந்த ஊருக்கு படையெடுத்த மக்களால் சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
தமிழர் திருநாளாம் பொங்கல் விழா அடுத்த வாரம் கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு பொங்கல் விடுமுறை திங்கள்கிழமை வருகிறது. அதற்கு முன்பு இரு நாட்கள் வார இறுதி விடுமுறை என்பதால், பொதுமக்கள் இன்று வெள்ளிக்கிழமை முதலே சொந்த ஊருக்குப் படையெடுக்க ஆரம்பித்துவிட்டனர்.
இதற்காகத் தலைநகர் சென்னை உட்பட மாநிலத்தின் பல்வேறு முக்கிய ஊர்களிலும் சிறப்புப் பேருந்துகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு பேருந்துகள், கார் உள்ளிட்ட வாகனங்களில் புறப்பட்டுச் செல்வதால் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சென்னை ஜிஎஸ்டி சாலையில் குரோம்பேட்டை – விமான நிலையம் இடையே நெரிசல் காரணமாக வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள பிரதான சாலைகள் மற்றும் முக்கிய சந்திப்புகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.







