தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசு பொருட்கள் தரமற்றது என புகார் எழுந்த நிலையில், தரக்கட்டுப்பாட்டு மேலாளரை பணி இடைநீக்கம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
பொங்கல் திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாட்டில் பொது மக்களுக்கு 21 வகையான பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் செய்யப்பட்டது. இந்நிலையில், மாநிலத்தின் ஒரு சில பகுதிகளில் சில நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்ட பொருட்களில் சில குறைபாடுகள் இருந்ததாக புகார்கள் எழுந்தன. இதனை தொடர்ந்து பரிசு தொகுப்பு விநியோகம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 21-ஆம் தேதி தலைமை செயலகத்தில் ஆய்வு கூட்டம் நடந்தது.
அண்மைச் செய்தி: பழங்குடி மக்களின் பொருட்களுக்கு, சந்தையில் உரிய விலை கிடைப்பதில்லை: மக்கள் வேதனை
மேலும், தரமற்ற பொருட்களை வழங்கிய நிறுவனங்களை, கருப்பு பட்டியலில் சேர்ப்பது உள்ளிட்ட கடும் நடவடிக்கைகளை எடுக்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளை அறிவுறுத்தினார். இந்நிலையில், பொங்கல் பரிசுக்காக கொள்முதல் செய்த பொருட்களின் தரத்தை உறுதிப்படுத்துவதில் மெத்தனமாக செயல்பட்ட தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் முதுநிலை தரக்கட்டுப்பாட்டு மேலாளரை பணி இடைநீக்கம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும், பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கியதில் சில இடங்களில் ஏற்பட்ட குளறுபடிகள் குறித்து விரிவாக விசாரணை செய்து முதலமைச்சரிடம் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








