முக்கியச் செய்திகள் தமிழகம்

காவல் புகார் ஆணையம் – வழக்குகளை முடித்து வைத்தது உயர்நீதிமன்றம்

காவல் புகார் ஆணையங்கள் அமைப்பது தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் கண்காணித்து வருவதால், தமிழகத்தில் ஆணையம் முறையாக அமைக்கப்படவில்லை என தொடரப்பட்ட வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் முடித்துவைத்து உத்தரவிட்டுள்ளது.

காவல்துறை சித்ரவதை, லாக்-அப் மரணங்கள் போன்ற காவல்துறையினருக்கு எதிராக புகார்களை கொடுக்க அனைத்து மாநிலங்களிலும் ‘காவல்துறை புகார் ஆணையம்’ அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, கடந்த 2013 ஆம் ஆண்டு தமிழகத்தில் ‘காவல்துறை சீர்த்திருத்த சட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்படி, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவல்துறையினருக்கு எதிராக புகார்கள் அளிக்க மாநில, மாவட்ட அளவில் புகார் ஆணையங்கள் அமைக்கப்பட்டன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மாநில அளவில் உள்துறை செயலாளர் தலைமையில் டி.ஜி.பி மற்றும் ஏ.டி.ஜி.பி ஆகியோர் உறுப்பினர்களாகவும், மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் காவல் கண்காணிப்பாளர் மற்றும் கூடுதல் கண்காணிப்பாளர்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.

இது, உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக உள்ளதாக கூறி, மக்கள் நீதி மய்யம் கட்சி சேர்ந்த ஓய்வு பெற்ற காவல் அதிகாரி ஏ.ஜி.மவுரியாவும், காவல் புகார் ஆணையங்களை அமைக்கக் கோரி வழக்கறிஞர் சரவணன் தட்சிணாமூர்த்தி என்பவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, தமிழ்நாடு காவலர் சீர்திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டு, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி மாநில மற்றும் மாவட்ட அளவில் காவல் புகார் ஆணையம் அமைக்கப்பட்டன என்றும், சட்டம் இயற்றப்பட்டது குறித்து உச்சநீதிமன்றத்தில் அரசுத்தரப்பில் மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

 

மேலும், இந்த விவகாரத்தை உச்சநீதிமன்றம் தொடர்ந்து கண்காணித்து வருவதால் உயர்நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் தெரிவித்தார். மனுதாரர்கள் தரப்பில், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி ஆணையங்கள் அமைக்கப்படவில்லை என்பதால் உயர்நீதிமன்றத்திற்கு உள்ள அதிகாரத்தின் அடிப்படையில் தலையிடலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

உயர்நீதிமன்றம் தலையிடலாம் என்றாலும், இந்த விவகாரத்தை உச்சநீதிமன்றம் தற்போதும் கண்காணித்து வருவதாலும், ஆணையம் அமைத்தது குறித்து தமிழக அரசு தாக்கல் செய்த மனு மீது எந்த கருத்தும் தெரிவிக்காத நிலையில் உயர்நீதிமன்றம் தலையிட முடியாது என தெரிவித்தனர்.

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி ஆணையங்கள் அமைக்கப்படாதது குறித்து, உச்சநீதிமன்றத்தை நாட மனுதாரர்களுக்கு அனுமதி அளித்த நீதிபதிகள், இரு வழக்குகளையும் முடித்துவைத்து உத்தரவிட்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

இந்திய ராணுவ மருத்துவக் குழுவால் காப்பாற்றப்பட்ட இரு உயிர்கள்!

அரசு மருத்துவமனைகளை நவீனமயமாக்க நடவடிக்கை: ஊர்வசி அமிர்தராஜ்

Gayathri Venkatesan

6 பேர் விடுதலை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது- காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ்

Web Editor