ஆண்டுதோறும் அக்டோபர் 21ம் தேதி காவலர் வீரவணக்க நாளாக நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 1959ம் ஆண்டு இதே நாளில் லடாக் பகுதியில் சீன ராணுவத்தினர் மறைந்திருந்து நடத்திய திடீர் தாக்குதலில் 10 மத்திய பாதுகாப்பு படைக்காவலர்கள் உயிரிழந்தனர். இத்தாக்குதலில் வீரமரணம் அடைந்த காவலர்களின் தியாகத்தை நினைவுக்கூரும் வகையில் காவலர் வீரவணக்க நாள் ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்தாண்டிற்கான காவலர் வீரவணக்க நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தலத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “காவலர் வீரவணக்க நாளான இன்று, மக்களின் பாதுகாப்பிற்காகவும், நாட்டின் அமைதிக்காகவும், சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கவும் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த காவல்துறை வீரர்களின் தியாகத்தையும், அர்ப்பணிப்பையும் போற்றுவோம்.
கடமையே உயிர்மூச்சாகக் கொண்டு, பொதுமக்களின் நலனுக்காகத் தங்கள் உயிரையும் துச்சமெனக் கருதி பணியாற்றும் காவலர்களின் வீரமும் தியாகமும் என்றும் போற்றுதலுக்குரியது”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




