வீரபாண்டி ராஜா மறைவுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
“எனது நண்பர் வீரபாண்டியாரின் புதல்வரும், திமுகவின் தேர்தல் பணிக்குழு செயலாளருமான வீரபாண்டி இராஜா மாரடைப்பால் இன்று காலமானார் என்ற செய்தியறிந்து வேதனையடைந்தேன்.
அரசியலால் வேறுபட்டு இருந்தாலும் எங்கள் குடும்பத்தில் ஒருவராகவே வீரபாண்டி இராஜா திகழ்ந்தார். எனது அன்புக்கும், பாசத்திற்கும் உரியவராக திகழ்ந்தார். என் மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் கொண்டிருந்தார். அரசியலில் உயரங்களைத் தொட்டிருக்க வேண்டியவர். யாருக்கும், எந்தத் தீமையும் நினைக்கக் கூடத் தெரியாதவர். அவரது மறைவு குறித்த செய்தியை தாங்கிக் கொள்ள முடியவில்லை.
வீரபாண்டி இராஜாவுக்கு இன்று பிறந்த நாள். இந்த நாள் மகிழ்ச்சியாகவும், கனவுகளுடனும் விடிந்திருக்கும். மகிழ்ச்சியும், உற்சாகமும் ஒரு சில மணி நேரங்களில் சோகமாக மாறும் என்பதை யாரும் எதிர்பார்க்கவில்லை.
இராஜா இன்னும் நீண்டகாலம் வாழ்ந்திருக்க வேண்டும். அவரது மறைவு வீரபாண்டியாரின் குடும்பத்திற்கும், சொந்தங்களுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.
வீரபாண்டி இராஜாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என தனது இரங்கல் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.








