செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை தொடங்கி வைக்க சென்னை வரும் பிரதமர் மோடி, அதிமுக-வின் உட்கட்சி விவகாரங்களில் தலையிட மாட்டார் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கொலை, கொள்ளை ஆள் கடத்தல் உள்ளிட்ட நிகழ்வுகளை தடுத்து நிறுத்த தமிழ்நாடு அரசுககு வழியில்லை என குற்றம்சாட்டினார். பள்ளி மாணவ மாணவியர் மர்மமான முறையில் மரணம் அடைவது தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் சுட்டிக்காட்டினார்.
திமுக ஆட்சி சுயநினைவு இழந்த ஆட்சியாக உள்ளது என்றும், இந்த ஆட்சி விளம்பர ஆட்சியாக உள்ளது அதிலும் முதல்வரே நடிக்கிறார். தன்னை மட்டுமே முன்னிலைப்படுத்தி கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் சரவணா ஸ்டோர்ஸ் லெஜெண்ட் ஹீரோ போல் முதலமைச்சர் நடித்துள்ளார் என்றார்.
காபந்து அரசாங்கம் தான் இன்று தமிழ்நாட்டில் நடைபெறுகிறது என கூறினார். பின்னர் ஜெயக்குமாரிடம், நாளை பிரதமர் மோடி சென்னை வருவதால், அதிமுக ஒற்றை தலைமை மற்றும் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இணைப்பு பற்றி ஆலோசனை நடத்துவதற்கு வாய்ப்பு உள்ளதா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து பேசிய ஜெயக்குமார், அதிமுகவின் உட்கட்சி விவகாரங்களில் பிரதமர் தலையிட மாட்டார் என்றம் அவ்வாறு தலையிடக்கூடாது என பிரதமருக்கும் தெரியும் என தெரிவித்தார்.
– இரா.நம்பிராஜன்








