முக்கியச் செய்திகள் இந்தியா கட்டுரைகள் செய்திகள்

ஆட்டிப்படைத்த ஆட்சி கலைப்புகள்…பிரதமர் மோடி கூறியதின் வரலாற்று பின்னணி என்ன?


எஸ்.இலட்சுமணன்

கட்டுரையாளர்

ஈரோடு கிழக்கு  தொகுதி இடைத் தேர்தலில் திமுக, காங்கிரஸ் கூட்டணியின் பிரச்சாரம் ஒருபுறம் அனல் பறந்து கொண்டிருக்க மறுபுறம் மாநிலங்களவையில் பிப்ரவரி 9ந்தேதி பிரதமர் மோடி 356-வது சட்டப் பிரிவு குறித்து பேசிய பேச்சில் அனல் தெறித்தது. கருணாநிதி ஆட்சியை கலைத்த காங்கிரசுடன் திமுக கூட்டணி அமைத்திருக்கிறது என்று பிரதமர் மோடி கூறிய வார்த்தைகள் இனி ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக கூட்டணியின் பிரச்சாரங்களிலும் எதிரொலிக்கலாம்.

குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு பதிலளித்து மாநிலங்களவையில் உரையாற்றிய பிரதமர் மோடி, சட்டப்பிரிவு 356ஐ தவறாக பயன்படுத்தி மாநில அரசுகளை பலமுறை மத்தியில் ஆண்ட காங்கிரஸ் அரசு கலைத்துள்ளதாக குற்றம்சாட்டினார்.  சட்டப்பிரிவு 356ஐ பயன்படுத்தி மாநில அரசுகளை 90 முறை மத்தியில் ஆண்ட  காங்கிரஸ் அரசு கலைத்துள்ளதாக விமர்சித்த பிரதமர் மோடி, மாநில அரசுகளை கலைப்பதில் அரை சதம் அடித்தவர் இந்திரா காந்தி என சாடினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பல்வேறு மாநில அரசுகள் கலைக்கப்பட்ட விதத்தை குறிப்பிட்டு பேசிய பிரதமர் மோடி தமிழ்நாடு குறித்தும் பேசினார். தமிழ்நாட்டில் கருணாநிதி, எம்.ஜி.ஆர் போன்ற ஜாம்பவான்களின் ஆட்சிகளையும் காங்கிரஸ் கலைத்துள்ளாக குறிப்பிட்டார். கருணாநிதி ஆட்சியை கலைத்த காங்கிரஸ் கட்சிக்கூடவே தற்போது திமுக கூட்டணி அமைத்துள்ளதாகவும் கிண்டலாக பிரதமர் மோடி விமர்சித்தார். பிரதமர் மோடியின் இந்த பேச்சு மூலம் சட்டப்பிரிவு 356 மீண்டும் பேசு பொருளாகியுள்ளது.

மாநில அரசுகள் அரசியல் சாசன சட்டத்தின் அடிப்படையில் செயல்படாத நிலை காணப்படும் போது அந்த அரசை கலைத்துவிட்டு அங்கு குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த வகை செய்கிறது 356 சட்டப்பிரிவு. பெரும்பாலும் மாநில ஆளுநர்களின் பரிந்துரையை பெற்ற பின்னரே இந்த நடவடிக்கையை மத்திய அரசுகள் மேற்கொண்டுவந்துள்ளன என்றாலும் சில சமயம் மத்திய அரசுகளே நேரடியாக 356-வது சட்டப் பிரிவை பயன்படுத்தியுள்ளன.

இதையும் படிங்க – “ஆளுநர் – நேற்று இன்று நாளை” – (நூல் அறிமுகம்)

குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்துவதற்கு முன்பு அந்த மசோதாவிற்கு மக்களவை மற்றும் மாநிலங்களவை என நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒப்புதல் பெற வேண்டும். பின்னர் மசோதா குடியரசுதலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு அவர் ஒப்புதல் அளித்த உடன் சம்பந்தப்பட்ட மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சி அமலுக்கு வரும். குடியரசு தலைவர் ஆட்சியை அதிகபட்சம் 6 மாதம் வரை அமல்படுத்தலாம். அதற்கு பின்னரும் தொடர வேண்டும் என்றால் மீண்டும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதலை பெற வேண்டும்.

சட்டம் ஒழுங்கு பிரச்சனை, தேர்தலுக்கு பின் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் ஏற்படும் அரசியல் குழப்பம் என பல்வேறு காரணங்களுக்காக 356 சட்டப் பிரிவை மத்திய அரசுகள் பயன்படுத்தி வந்துள்ளன. ஆனால் அரசியல் காரணங்களுக்காகவே இந்த சட்டப்பிரிவை மத்தியில் ஆளும் அரசுகள் அதிக அளவில் பயன்படுத்தியதாக விமர்சனம் எழுவதுண்டு.

குறிப்பாக 1994ம் ஆண்டு எஸ்.ஆர்.பொம்மை வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன்பு இது போன்ற குற்றச்சாட்டுக்கள் அதிக அளவில் எழுந்துள்ளன. 356 சட்டப்பிரிவை பயன்படுத்தி முதன் முறையாக குடியரசு தலைவர் ஆட்சி பிறப்பிக்கப்பட்ட மாநிலம் பஞ்சாப். காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட உட்கட்சி பிரச்சனை எதிரொலியாக 1951ம் ஆண்டு ஜூன் 20-ந்தேதி அம்மாநில சட்டப்பேரவை சஸ்பெண்ட் செய்யப்பட்டு குடியரசு தலைவர் ஆட்சி பிறப்பிக்கப்பட்டது.

அது முதல் இதுவரை 125க்கும் மேற்பட்ட முறை 356 சட்டப்பிரிவு பயன்படுத்தப்பட்டு உள்ளன. அந்த சட்டப்பிரிவை பயன்படுத்தி அதிக முறை குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்ட மாநிலங்களில் முதல் இடத்தில் மணிப்பூர் உள்ளது. மொத்தம் 10 முறை அங்கு ஆட்சி கலைக்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக ஜம்மு காஷ்மீரிலும், உத்தரபிரதேசத்திலும் தலா 9 முறை குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் பஞ்சாப் மற்றும் பீகார் மாநிலங்கள் உள்ளன. அங்கு தலா 8 முறை குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. அதிக காலம் குடியரசு தலைவர் ஆட்சியில் இருந்த மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின்  பட்டியலில் ஜம்மு காஷ்மீர் முதலிடத்தில் உள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை 4 முறை 356 சட்டப்பிரிவை பயன்படுத்தி மாநில அரசுகள் கலைக்கப்பட்டுள்ளன. கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சி இரண்டு முறை, எம்.ஜி.ஆர் தலைமையிலான அதிமுக ஆட்சி ஒரு முறை, ஜானகி எம்.ஜி.ஆர் தலைமையிலான அதிமுக ஆட்சி ஒருமுறை என 4 முறை ஆட்சி கலைப்பு தமிழ்நாட்டில் அரங்கேறியுள்ளது.

கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சி முதல் முறையாக 1976ம் ஆண்டு கலைக்கப்பட்ட போது இந்திரா காந்தி பிரதமராக இருந்தார். ஆட்சிக்கு வந்த இரண்டே ஆண்டுகளில் 1991ம் ஆண்டு கருணாநிதி ஆட்சி கலைக்கப்பட்டபோது மத்தியில் காங்கிரஸ் ஆதரவுடன் சந்திரசேகர் ஆட்சி நடத்திக்கொண்டிருந்தார். 1980ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த 3 ஆண்டுகளில் எம்.ஜி.ஆர் தலைமையிலான அதிமுக அரசு கலைக்கப்பட்டபோது மத்தியில் இந்திராகாந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு நடைபெற்று வந்தது. 1988ம் ஆண்டு ஜனவரி மாதம் எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி எம்.ஜி.ஆர் தலைமையிலான அதிமுக அரசை ராஜீவ்காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு கலைத்தது.

70களிலும், 80களிலும் ஆட்சிக் கலைப்புகள் உச்சக்கட்டத்தில் இருந்த காலகட்டத்தில் 356 சட்டப்பிரிவு தேசிய அரசியலிலும், மாநில அரசியலிலும் பெரும் பேசு பொருளாக இருந்தது. எந்த நேரத்தில் ஆட்சி கலைக்கப்படுமோ என்கிற பீதியினுடயே எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில முதலமைச்சர்கள் இருந்ததாக விமர்சனங்கள் எழுந்தன. இந்திராகாந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசும், மொரார்ஜி தலைமையிலான ஜனதா கட்சி அரசும் பழிக்கு பழியாக மாநில அரசுகளை கலைத்ததாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.

356 சட்டப்பிரிவை பயன்படுத்தி மாநில அரசுகளை கலைத்த பிரதமர்களின் பட்டியலில் இந்திரா காந்தி முதல் இடத்தில் உள்ளார். அவரது 16 ஆண்டு கால ஆட்சிக் காலத்தில் 50 முறை 356 சட்டப்பிரிவு பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பவர் மொரார்ஜி தேசாய். அவர் 1977ம் ஆண்டு முதல் 79ம் ஆண்டுவரை பிரதமராக இருந்த போது 16 முறை மாநில அரசுகள் கலைக்கப்பட்டுள்ளன. இதேபோல்  ஒரே வருடத்தில் அதிக முறை ஆட்சி கலைப்பை நிகழ்த்தியவர் என்கிற பெயரையும் மொரார்ஜி தேசாய் பெற்றுள்ளார்.

1977ம் ஆண்டு அவர் பிரதமராக இருந்தபோது  12 முறை 356 சட்டப்பிரிவு பயன்படுத்தப்பட்டுள்ளது. அதிக முறை அந்த சட்டப்பிரிவை பயன்படுத்திய பிரதமர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் மன்மோகன் சிங் உள்ளார். அவரது ஆட்சி காலத்தில் 12 முறை குடியரசு தலைவர் ஆட்சி மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டு உள்ளன.  பாஜக ஆட்சி காலத்திலும் 356 சட்டப்பிரிவை பயன்படுத்தி ஆட்சி கலைப்புகள் நடைபெற்றுள்ளன.  வாஜ்பாய் பிரதமராக இருந்த 1999 முதல் 2004 வரையிலான ஆண்டு காலத்தில் 5 முறை குடியரசு தலைவர் ஆட்சி மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டு உள்ளன.

ஆட்சி கலைப்புக்கு கடிவாளம் போட்ட தீர்ப்பு

மத்தியில் ஆட்சிக்கு வரும் போது அரசியல் கட்சிகள் தனிப்பட்ட அரசியல் காரணங்களுக்காக மாநில அரசுகளை கலைப்பதற்கு கடிவாளம் போட்ட தீர்ப்பாக கருதப்படும் எஸ்.ஆர் பொம்மை வழக்கில், அரசியல் சாசனத்தின் அடிப்படை கட்டமைப்பு என்கிற முக்கியமான அளவுகோலை வைத்தே உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கியது. கர்நாடகாவில் எஸ்.ஆர். பொம்மை தலைமையிலான ஜனதா தள அரசு நடைபெற்று வந்தபோது கே.ஆர்.மெலாகரி தலைமையில் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் சிலர் போர்க்கொடி தூக்கினர். இதையடுத்து எஸ்.ஆர்.பொம்மை அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டதாக ஆளுநர் வேங்கடசுப்பையா மத்திய அரசுக்கு அறிக்கை அளித்தார். அப்போது மத்தியில் ஆண்ட ராஜீவ்காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு அளித்த பரிந்துரையின் பேரில் எஸ்.ஆர் பொம்மை அரசை சட்டப்பிரிவு 356ஐ பயன்படுத்தி கலைத்து  குடியரசு தலைவர் வெங்கட்ராமன் உத்தரவு பிறப்பித்தார். இந்த வழக்கு உச்சநீதிமன்றத்திற்கு சென்றபோது அரசியல் சாசன சட்டப்பிரிவு 356 மத்திய அரசால் தவறாக பயன்படுத்தப்படாத வகையில் பல்வேறு உத்தரவுகளை உச்சநீதிமன்றம் வழங்கியது.

1. சட்டப்பிரிவு 356ஐ பயன்படுத்த குடியரசு தலைவருக்கு உள்ள அதிகாரம் எல்லையற்றதல்ல.

2.நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதல் பெற்ற பின்னர் தான் சட்டப்பிரிவு 356ஐ பயன்படுத்தி மாநில சட்டமன்றங்களை கலைக்க முடியும்.

3. 356வது சட்டப்பிரிவை பயன்படுத்தி மாநில சட்டமன்றங்களை கலைப்பது நீதிமன்ற விசாரணைக்கு உட்பட்டது.

4. மாநில அரசுகளை கலைப்பதற்காக 356வது சட்டப்பிரிவு தவறாக பயன்படுத்தப்பட்டு இருந்தால்,  கலைக்கப்பட்ட ஆட்சியை மீண்டும் பதவியில் அமர்ந்த நீதிமன்றத்திற்கு அதிகாரம் உண்டு என்பது உள்ளிட்ட முக்கிய உத்தரவுகளை உச்சநீதிமன்றம் வழங்கியது.

இந்த தீர்ப்புக்கு பின்னர் சட்டப்பிரிவு 356ஐ பயன்படுத்தி மாநில அரசுகளை மத்திய அரசு கலைப்பது வெகுவாகக் குறைந்தது. இந்திய அரசியல் வரலாற்றில் அதிகம் மேற்கோள் காட்டப்பட்ட வழக்குகளில் ஒன்றாகவும் எஸ்.ஆர்.பொம்மை வழக்கு திகழ்கிறது.

-எஸ்.இலட்சுமணன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram