பிரதமராக அல்ல; முதல் சேவகனாகவே கருதுகிறேன்: நரேந்திர மோடி

நாட்டின் பிரதமராக தான் தன்னை ஒரு நொடி கூட கருதியதில்லை என தெரிவித்துள்ள நரேந்திர மோடி, நாட்டின் பிரதான சேவகனாகவே கருதுவதாகக் குறிப்பிட்டுள்ளார். நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்று 8 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து,…

நாட்டின் பிரதமராக தான் தன்னை ஒரு நொடி கூட கருதியதில்லை என தெரிவித்துள்ள நரேந்திர மோடி, நாட்டின் பிரதான சேவகனாகவே கருதுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்று 8 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து, இமாச்சலப் பிரதேசம், சிம்லாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார். அப்போது, விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 அளிக்கும் கரீப் கல்யாண் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள சுமார் 10 கோடி விவசாயிகளுக்கு 11வது தவணையாக ரூ.21 ஆயிரம் கோடி உதவித்தொகையை பிரதமர் விடுவித்தார்.

அப்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பாஜக அரசு பொறுப்பேற்ற நாள் முதல் ஏழைகளின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபட்டு வருவதாக தெரிவித்தார். அனைத்து துறைகளிலும் தன்னிறைவு பெற்ற நாடாக இந்தியாவை உருவாக்குவதற்காக தான் தொடர்ந்து செயலாற்றி வருவதாக அவர் குறிப்பிட்டார். இந்தியா தற்போது பிற நாடுகளுக்கு உதவி செய்யும் நாடாக மாறியுள்ளது என்றும் எந்தவொரு தேசத்தின் முன்பும் தலை குனியும் நிலையில் நம் நாடு இல்லை என்றும் அவர் கூறினார்.

நாட்டின் எல்லைகள் மிகவும் பாதுகாப்பாக உள்ளதாக கூறிய நரேந்திர மோடி, பிற நாடுகளுடன் நேருக்கு நேர் சமமாக நமது நாடு நிற்பதாகக் குறிப்பிட்டார்.

கடந்த 8 ஆண்டுகளில் தான் ஒருபோதும் தன்னை பிரதமராக கருதியதில்லை என தெரிவித்த நரேந்திர மோடி, கோப்புகளில் கையெழுத்திடும்போது மட்டுமே பிரதமராக செயல்படுவதாகவும், மற்ற அனைத்து நேரங்களிலும் நாட்டின் முதன்மை சேவகனாகவே தன்னை கருதுவதாகவும் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.