பிளாக்மேஜிக் செய்து மக்கள் நம்பிக்கையை பெற முடியாது- காங்கிரஸ் மீது பிரதமர் மோடி மறைமுக சாடல்

பிளாக் மேஜிக் மூலம் மக்கள் நம்பிக்கையை பெற்றுவிட முடியாது என காங்கிரஸ் கட்சி சமீபத்தில் நடத்திய கறுப்புச் சட்டை போராட்டத்தை மறைமுகமாக பிரதமர் மோடி சாடியுள்ளார். ஹரியானா மாநிலம் பாணிபட்டில் இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கு…

பிளாக் மேஜிக் மூலம் மக்கள் நம்பிக்கையை பெற்றுவிட முடியாது என காங்கிரஸ் கட்சி சமீபத்தில் நடத்திய கறுப்புச் சட்டை போராட்டத்தை மறைமுகமாக பிரதமர் மோடி சாடியுள்ளார்.

ஹரியானா மாநிலம் பாணிபட்டில் இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கு சொந்தமான எண்ணெய் சுத்திரிப்பு நிலையத்தில் இரண்டாம் தலைமுறை எத்தனால் தயாரிக்கும் ஆலை இன்று தொடங்கப்பட்டது. 900 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த ஆலையை பிரதமர் மோடி, வீடியோ கான்பரன்ஸ் மூலம் திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, வேளாண் கழிவுப் பொருட்கள் முன்பு விவசாயிகளுக்கு சுமையாக இருந்ததாகவும் தற்போது எதனால் தயாரிப்பு மூலம் அது விவசாயிகளுக்கு வருமானம் ஈட்டித் தரும் பொருளாக மாறிவிட்டதாகவும் தெரிவித்தார்.

பெட்ரோலில் எத்தனால் கலப்பதன் மூலம் கடந்த 7 அல்லது 8 ஆண்டுகளில் சுமார் 50 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு நாட்டிற்கு அந்நியச் செலாவணி மிச்சமாகியிருப்பதாகவும் பிரதமர் மோடி கூறினார். அடுத்த சில ஆண்டுகளில் நாட்டில் உள்ள 75 சதவீத வீடுகளுக்கு குழாய் மூலம் எரிவாயு விநியோகிக்கப்படும் என்றும் பிரதமர் மோடி  தெரிவித்தார்.

கடந்த ஆகஸ்ட் 5ந்தேதி விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கறுப்புச் சட்டை அணிந்து போராடியதை மறைமுகமாக விமர்சித்த பிரதமர் மோடி, பிளாக் மேஜிக் செய்து மக்களிடையே நம்பிக்கையை பெற்றுவிட முடியாது என்று கூறினார். பில்லி சூனியம் என என்ன செய்தாலும் மக்கள் அவர்களை நம்பமாட்டார்கள் எனவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

 

அரசியலில் சுயநலமாக செயல்பட்டால் பெட்ரோல், டீசலைக் கூட இலவசமாக தருகிறோம் என வாக்குறுதி அளிக்கலாம், ஆனால் அப்படி வாக்குறுதி அளிப்பது நாடு தற்சார்பு நிலையை அடைவதை தடுக்கும் செயல் என்று தெரிவித்த பிரதமர் மோடி, இது  குழந்தைகளின் எதிர்காலத்தை வஞ்சிக்கும் செயல் என்றும் விமர்சித்தார். இலவச திட்டங்களை அறிவிப்பதால் புதிய தொழில்நுட்பங்களில் முதலீடு செய்ய முடியாது என்றும் இதனால் நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார். இலவச திட்டங்களை அறிவித்து மக்களை கவர நினைப்பது தேச நலன் சார்ந்தது அல்ல என்றும் தேச நலனுக்கு எதிரானது என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.