மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி மதுரை தொகுதியில் போட்டியிட வேண்டும் என்கிற விருப்பத்தை மதுரை பாஜகவினர் போஸ்டர் மூலமாக வெளிப்படுத்தியுள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடியின் 72வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை பாஜகவினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். வழக்கமாக வித்தியாசமான போஸ்டர்களுக்கு பேர் போன மதுரையில் பாஜகவினர் பிரதமர் மோடிக்கு வித்தியாசமாக பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
வரும் 2024ல் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் மதுரை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதாக பிரதமர் மோடிக்கு வாழ்த்து போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதேபோல், பாஜக தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் விஷ்ணு பிரசாத் என்பவர், ‘2024 மக்களவைத் தேர்தலில், மதுரை தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் மோடி வெற்றி’ என போஸ்டர் ஒட்டி பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், எல்லீஸ் நகர், பெரியார் பேருந்து நிலையம், சின்ன சொக்கிக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் மதுரை மாவட்ட பாஜகவினர் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.
வரும் மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி மதுரை தொகுதியில் போட்டியிட வேண்டும் என்ற விருப்பத்தையே பாஜகவினர் இவ்வாறு போஸ்டர் மூலமாக வெளிப்படுத்தியுள்ளனர். இந்த போஸ்டர் தற்போது மதுரையில் பேசுபொருளாக மாறியுள்ளது.







