வாரணாசி தொகுதியில் நடைபெற்ற கிசான் நியாய் பேரணியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ப்ரியங்கா காந்தி கலந்துகொண்டார்.
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி நகரின் ரோஹானியா பகுதியில் வைத்து ‘கிசான் நியாய்’ பேரணி இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட காங்கிரஸ் பொதுச்செயலாளர் ப்ரியங்கா காந்தி பேசியதாவது:
“மத்திய அமைச்சரின் மகன் 6 விவசாயிகளை வாகனத்தால் மோதுகிறார். பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தங்களுக்கு நீதி வேண்டும் என்கிறார்கள். ஆனால் அரசோ அமைச்சர் மற்றும் அவரின் மகனை காப்பாற்றுகிறது. லக்னோவில் நடந்த ‘அசாதி கா அம்ரித் மகா உத்சவ்’ நிகழ்வில் கலந்துகொள்ள முடிந்த பிரதமரால், லகிம்பூர் கேரி-க்கு சென்று பாதிக்கப்பட்டவர்களின் துக்கத்தில் கலந்துகொள்ள முடியவில்லை. போராடும் விவசாயிகளை பிரதமர் தீவிரவாதிகள் என்கிறார். போராடும் விவசாயிகளை யோகி ஆதித்யநாத் வன்முறையாளர்கள் என்று கூறி, அச்சுறுத்துகிறார். மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா 2 நிமிடங்களில் போராடும் விவசயிகளை வழிக்கு கொண்டு வந்துவிடுகிறேன் என்கிறார்.
பிரதமர் மோடி அவருக்காக இரண்டு விமானங்களை ரூ. 16,000 கோடிக்கு கடந்த ஆண்டும் வாங்கினார். ஒட்டு மொத்தமாக ஏர் இந்தியாவை தனது பணக்கார நண்பருக்கு ரூ. 18,000 கோடிக்கு விற்கிறார்” இவ்வாறு அவர் பேசினார்.







