ஜி7 மாநாட்டில் பங்கேற்க ஜெர்மனி சென்ற பிரதமர் மோடி!

ஜெர்மனியில் நடைபெறும் ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று அதிகாலை ஜெர்மனிக்கு புறப்பட்டுச் சென்றார். கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, இங்கிலாந்து, அமெரிக்கா, ஜப்பான்  ஆகிய 7 நாடுகளைக் கொண்டது ஜி7…

ஜெர்மனியில் நடைபெறும் ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று அதிகாலை ஜெர்மனிக்கு புறப்பட்டுச் சென்றார்.

கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, இங்கிலாந்து, அமெரிக்கா, ஜப்பான்  ஆகிய 7 நாடுகளைக் கொண்டது ஜி7 அமைப்பாகும். இக்கூட்டமைப்பின் 48ஆவது உச்சி மாநாடு ஜெர்மனியில் இன்று தொடங்குகிறது. இரண்டு நாட்கள் நடைபெறவுள்ள இம்மாநாட்டில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கிறார்.

இதுதொடர்பாக பிரதமர் கூறுகையில், ஜி7 அமைப்புக்குத் தலைமை தாங்கும் நாடு என்ற அடிப்படையில், ஜெர்மனி பிரதமர் ஒலாப் ஸ்கால்ஸ் விடுத்த அழைப்பின் பேரில் நான் ஸ்கிளாஸ் எல்மாவோவுக்கு பயணம் மேற்கொள்கிறேன். கடந்த மாதம் இந்தியா, ஜெர்மனி அரசுகளுக்கு இடையேயான ஆலோசனைக்குப் பிறகு ஜெர்மன் பிரதமர் ஓலாப் ஸ்கால்ஸை சந்திப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது.

இந்த மாநாட்டில் சுற்றுச்சூழல், எரிசக்தி, காலநிலை, உணவுப் பாதுகாப்பு, சுகாதாரம், பயங்கரவாத எதிர்ப்பு, பாலின சமத்துவம் போன்ற முக்கியப் பிரச்னைகள் குறித்து ஜி7 நாடுகள், ஜி7 கூட்டணி நாடுகள் மற்றும் விருந்தினர் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளுடன் கருத்துகளைப் பரிமாறிக் கொள்ளவுள்ளேன். ஜெர்மனியில் தங்கியிருக்கும்போது ஐரோப்பா முழுவதும் வசிக்கும் இந்திய வம்சாவளியினரையும் நான் சந்திக்கவுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

https://twitter.com/narendramodi/status/1540685650865029120

இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், ஜி7 மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜெர்மனியில் உள்ள ஸ்கிளாஸ் எல்மோவுக்கு பயணம் மேற்கொள்கிறேன். முனிச் நகரில் நடைபெறவுள்ள இந்தியர்களுடனான நிகழ்விலும் பங்கேற்கவுள்ளேன். இந்த உச்சி மாநாட்டிற்கிடையே ஜி7 மற்றும் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ள பல்வேறு நாடுகளின் தலைவர்களை சந்தித்துப் பேதுவதையும் நான் எதிர்நோக்கியுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

https://twitter.com/narendramodi/status/1540685656347017216

மற்றொரு ட்வீட்டில், ஜெர்மனி பயணத்துக்குப் பிறகு இந்தியா திரும்பும் வழியில் ஜூன் 28ஆம் தேதி அபுதாபி செல்லவுள்ளதாகவும், ஐக்கிய அரபு அமீரகத்தின் மன்னரும், அந்நாட்டின் முன்னாள் அதிபருமான ஷேக் கலிஃபா பின் சையது அல் நஹ்யான் மறைவையொட்டி, தற்போதைய மன்னரும், அதிபருமான ஷேக் முகம்மது பின் சையது அல் நஹ்யான்-ஐ சந்தித்து இரங்கல் தெரிவிக்கவுள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.