அதுமட்டுமின்றி ’வேட்டையாடு விளையாடு’ ராகவன், ’காக்க காக்க’ அன்பு செல்வன் மற்றும் ’என்னை அறிந்தால்’ சத்யதேவ் ஆகிய மூன்று கேரக்டர்களை இணைக்கும் முயற்சியும் நடைபெறுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
கவுதம் மேனன் இயக்கத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த படம் தான் “வேட்டையாடு விளையாடு”. இப்படத்தில் கமலுடன் கமலினி முகர்ஜி, ஜோதிகா, டேனியல் பாலாஜி, பிரகாஷ் ராஜ் போன்றோர் நடித்திறுதனர். ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
இப்படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் திரை ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்து இயக்குனர் கவுதம் மேனனிடம் ரசிகர்கள் தொடர்ந்து கேட்டுவந்தனர். கவுதம் மேனன் வேட்டையாடு விளையாடு பாகம் இரண்டிற்கான கதை வைத்திருப்பதாகவும் அது குறித்து பேச்சுவார்த்தையை நடத்திவருவதாகவும் தகவல்கள் வெளிவந்தது.
ஆனால், இத்தகவல் வெளியாகி இரண்டு வருடங்கள் ஆகியும் இதற்கான முன்னெடுப்புகள் ஏதும் நடப்பதாகத் தெரியவில்லை. இருப்பினும் ரசிகர்கள் தொடர்ந்து இயக்குனர் கவுதமிடம் வேட்டையாடு விளையாடு இரண்டாம் பாகம் குறித்துப் பல முறை கேட்டுவந்தனர்.
ஆனால் லாக்டவுன், தேர்தல் எனப் பல காரணங்களால் கமலிடம் வேட்டையாடு விளையாடு கதை குறித்து கவுதம் மேனன், கமலிடம் பேச இயலாமல் போனதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் தான் விக்ரம் படம் மூலம் கமல் திரையுலகிற்கு மாபெரும் வெற்றியோடு கம் பேக் கொடுத்தார்.மேலும் அடுத்தடுத்த பட அறிவிப்புகளை அளித்துத் திரை ரசிகர்களை ஆசிரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
இதையடுத்து, கவுதம் மேனன்சிம்புவை வைத்து “வெந்து தணிந்தது காடு” எனும் படத்தை இயக்கி வெளியிட்டார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே “வேட்டையாடு விளையாடு-2” பட்டதிற்கான கதையைக் கேட்டு என் சம்மதத்தை கவுதமிடம் தெரிவித்துவிட்டேன். ஆனால் இடையில் கொரோனா வந்து விட்டது. எனவே முழுக்கதை என்னை வந்தடையவில்லை என்றார்.
பின்னர் நிகழ்ச்சியிலேயே விளக்கமளித்த இயக்குநர் கவுதம் மேனன், “வேட்டையாடு விளையாடு-2” பட்டதிற்கான கதையை எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிக்கொண்டிருக்கிறார் என்றும் முழுக்கதையும் விரைவில் கமல்ஹாசனுக்கு வந்து விடும் என்றும் தெரிவித்தார்.
அதை தொடர்ந்து, ‘வேட்டையாடு விளையாடு’ திரைப்படம் ரீமாஸ்டர் செய்யப்பட்டு மீண்டும் திரையரங்குகளில் வெளியானது. கடந்த ஜூன் 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான முதல் காட்சியில் ரசிகர்கள் கொண்டாட்டமாகக் கண்டுகளித்தனர்.
இந்நிலையில், இப்படம் வெளியான திரையரங்குகள் சனி, ஞாயிறுகளில் ஹவுஸ்புல் காட்சிகளால் நிறைந்து வருகிறது. இதனால், மறுவெளியீட்டிலும் கமல்ஹாசன் வசூல் மன்னன் என்பதை மீண்டும் நிரூபித்துக் காட்டியுள்ளார்.
இந்நிலையில், ‘வேட்டையாடு விளையாடு’ படத்தின் சக்ஸஸ் மீட்டில் இயக்குனர் கௌதம் மேனன் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர் “விரைவில் வேட்டையாடு விளையாடு 2 படத்துக்கான வேலைகள் தொடங்கும். கமல் சாரிடம் இது குறித்து பேச உள்ளேன். எனது போலீஸ் கதாபாத்திரங்களான சூர்யா நடித்த அன்பு செல்வன், அஜித் நடித்த சத்யதேவ் மற்றும் கமல்ஹாசன் நடித்த ராகவன் ஆகிய கதாபாத்திரங்களை இணைத்து ஒரு படத்தில் கொண்டுவரும் விதமாக ஒரு திட்டம் உள்ளது” எனக் கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.










