விமானத்தில் பயணம் செய்யும் பயணிகள் முகக்கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் என்றும் அணிய மறுக்கும் பயணிகள் விமானத்தில் பயணிக்க தடை விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் மீண்டும் கொரானா தொற்று வேகம் எடுத்து வருகிறது. குறிப்பாக 10-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. இந்நிலையில், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளான முகக்கவசம் அணிவது, மற்றும் கைகளை சுத்தப்படுத்துவது உள்ளிட்ட விழிப்புணர்வு மக்கள் மத்தியில் உருவாக வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா தொற்று பரவும் இடங்களாக கருதப்படும் விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களில் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், விமான பயணிகள் பெரும்பாலும் முகக்கவசம் அணிவதில்லை என தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், தாமாக முன்வந்து வழக்கு தொடர்ந்துள்ளது. அந்த வழக்கை விசாரித்த 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு கடுமையாக எச்சரித்துள்ளனர். விமான பயணிகள் முழு நேரமும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்றும், முகக்கவசம் அணியாத பயணிகளை விமானத்தில் ஏற்ற வேண்டாம் என்றும் கட்டாயமாக தெரிவித்துள்ளனர்.
இந்த உத்தரவை விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகளும் தற்போது தெரிவித்துள்ளனர். முகக்கவசம் அணியாத பயணிகள் விமானத்தில் செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் விதி விலக்கு இருக்கும் சூழலில் மட்டுமே முகக்கவசத்தை அகற்ற அனுமதி வழங்கப்படும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
கொரோனா விதிகளை மீறுவோர் மற்றும் பலமுறை எச்சரித்தும் முகக்கவசம் அணியாத பயணிகளை கட்டுப்பாடாற்ற பயணிகளாக கருதி விமானத்தில் இருந்து இறக்கி விடப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம், கொல்கத்தாவில் இருந்து டெல்லிக்கு விமானத்தில் பயணம் செய்த நீதிபதி ஹரிசங்கர், பயணிகள் முகக்கவசம் அணியாததை கண்டு இந்த வழக்கை தாமாக முன்வந்து தாக்கல் செய்தார். அந்த வழக்கில் தான் தற்போது நீதிபதிகள் கடுமையாக எச்சரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
– இரா.நம்பிராஜன்








