புதிய மாவட்டச் செயலாளர்களை நியமிக்க திட்டம்? – திமுக ஆலோசனை

சரியாக செயல்படாத மாவட்டச் செயலாளர்களை மாற்றி, புதிய நிர்வாகிகளை நியமிக்க திமுக கட்சியின் தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அமைப்பு ரீதியாக 72 மாவட்டங்கள் கொண்ட திமுகவில், மேலும் புதிய மாவட்டங்களை…

சரியாக செயல்படாத மாவட்டச் செயலாளர்களை மாற்றி, புதிய நிர்வாகிகளை நியமிக்க திமுக கட்சியின் தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அமைப்பு ரீதியாக 72 மாவட்டங்கள் கொண்ட திமுகவில், மேலும் புதிய மாவட்டங்களை உருவாக்கவும், பெரிய மாவட்டங்களை பிரித்து புதிய மாவட்டங்களை உருவாக்கவும், மேலும் சரியாக செயல்படாத மாவட்டச் செயலாளர்களை பதவியிலிருந்து நீக்கவும் திமுக  கட்சியின் தலைமை முடிவு செய்துள்ளது.

கடந்த 2018-ம் ஆண்டு 65 மாவட்டங்களாக இருந்த நிலையில், பரப்பளவில் பெரிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, எல்லை பிரச்னைகள் இருந்த மாவட்டங்கள் ஒழுங்கமைக்கப்பட்டன. இதன்படி, திமுகவின் மாவட்ட நிர்வாக அமைப்பில் புதியதாக 7 மாவட்டச் செயலாளர்கள் வரை நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும், நிர்வாக வசதிக்கேற்ப திமுகவின் மாவட்டங்களின் எண்ணிக்கையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த மே 14-ம் தேதி நடைபெற்ற திமுக நிர்வாகிகள் கூட்டத்தில், கட்சியின் வளர்ச்சிக்காக உழைக்காதவர்களுக்கு கட்சியில் இடமில்லை என்ற திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மாவட்டச் செயலாளர்களுக்கு எச்சரிக்கையும் விடுத்திருந்தார். இதனையடுத்து, கடந்த மே 21-ம் தேதி நெல்லை மத்திய மாவட்டச் செயலாளர் அப்துல் வஹாப், சரியாக செயல்படாததால் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

மேலும் 2024-ம் ஆண்டு நடைபெறவிருக்கும், நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுக வெற்றிபெற முழு வீச்சில் பணியாற்றவும், கட்சி நிர்வாகிகளின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கவும் மாவட்ட நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.