திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – நேற்று ஒரே நாளில் 90 ஆயிரம் பேர் தரிசனம்..!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று ஒரே நாளில் 90 ஆயிரம் பேர் தரிசனம் செய்துள்ளனர். கோடை விடுமுறை விடப்பட்டதிலிருந்து மக்கள் குடும்பத்துடன் சுற்றுலா தளங்களுக்கும், கோயில்களுக்கும் படையெடுக்க தொடங்கியுள்ளனர். இதனால் அனைத்து சுற்றுலா தளங்களிலும் …

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று ஒரே நாளில் 90 ஆயிரம் பேர் தரிசனம் செய்துள்ளனர்.

கோடை விடுமுறை விடப்பட்டதிலிருந்து மக்கள் குடும்பத்துடன் சுற்றுலா தளங்களுக்கும், கோயில்களுக்கும் படையெடுக்க தொடங்கியுள்ளனர். இதனால் அனைத்து சுற்றுலா தளங்களிலும்  மக்கள் கூட்டம் அதிகரித்தே காணப்படுகிறது. சுற்றுலா தளங்களே இப்படியானால், கோயில் தளங்களை சொல்லவா வேண்டும்.

திருப்பதி ஏழுமலையானைத் தரிசிக்க நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் செல்வது வழக்கம்.  மேலும் கோடை விடுமுறை முடிய இன்னும் சில நாள்களே உள்ள  நிலையில் இங்கு பக்தர்களின் கூட்டம் பலமடங்கு அதிகரித்துள்ளது.  இலவச தரிசனத்தில் சுவாமி தரிசனம் செய்ய, 24 மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து, திருப்பதி ஏழுமலையானை வழிபடுவதற்காக கடந்த 3 நாட்களாக ஏராளமான பக்தர்கள் சென்று வருகின்றனர்.  இதன் காரணமாக திருப்பதி மலையில் பக்தர்கள் கூட்டம் அலை மோதி வருகிறது.  பக்தர்கள் தங்குவதற்கு தேவையான அறைகள் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவும் தற்போதைய நிலையில் அறைகள் கிடைக்காத பக்தர்கள் திறந்த வெளி, சொந்த வாகனம் ஆகியவற்றில் தங்கி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

மேலும் இலவச தரிசனத்திற்காக வைகுண்டம் காத்திருப்பு மண்டபத்திற்கு வெளியே ஐந்து கிலோ மீட்டர் நீள வரிசையில் பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.  இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் சுமார் 90,721 பக்தர்கள் ஏழுமலையானை வழிப்பட்டுள்ளனர்.  அதனுடன் சுமார் 50 ஆயிரத்து 599 பக்தர்கள் தலைமுடி சமர்ப்பித்து வேண்டுதல்களை நிறைவு செய்தனர்.  மேலும்,  நேற்று ஏழுமலையானுக்கு 3 கோடியே 28 லட்சம் ரூபாய் காணிக்கையாக கிடைத்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.