தமிழகம் முழுவதும் இன்று 2-ம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்துள்ள நிலையில், தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. கடந்த 12-ஆம் தேதி தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. அன்று ஒரே நாளில் 28 லட்சத்து 91 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இந்நிலையில் இன்றும் தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் 30 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று 1,600 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. சென்னையில், 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த 17 -ஆம் தேதி மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற இருந்த நிலையில், போதிய தடுப்பூசிகள் கிடைக்காததால் இன்று முகாம் நடைபெறுவதாக தமிழக அரசு ஏற்கனவே அறிவித்து இருந்தது.
காலை 7 மணி முதல் இரவு 7 மணிவரை இந்த தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.







