சோனம் வாங்சுக்-விற்கு மருத்துவ உதவி கோரிய மனு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு…!

காலவறையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சோனம் வாங்சுக்-விற்கு மருத்துவ உதவி கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீட் மற்றும் பிற போட்டித் தேர்வுகள் முறைகேடு தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) தொடர் போராட்டம் நடத்தி வருகிறது. இந்த போராட்டத்தில் இணைந்த பருவநிலை ஆர்வலர் சோனம் வாங்சுக் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகிறார். 18 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வரும் நிலையில் வாங்சுக்கின் உடல் நிலை மோசமடைந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் செயற்பாட்டாளரும் வழக்கறிஞருமான ராகேஷ் குமார் சைனி என்பவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொது நலவழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் வாங்சுக்கின் உடல்நிலை கணிசமாக மோசமடைந்துள்ளதால் அவரை ஒரு அரசு மருத்துவமனைக்கு மாற்றுமாறு மத்திய மற்றும் டெல்லி அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என நீதிமன்றத்தை வலியுறுத்தப்பட்டு இருந்தது.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் மத்திய மற்றும் மாநில (டெல்லி) அரசுகள் பதிலளிக்க கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பருவநிலை ஆர்வலர் சோனம் வாங்சுக், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி ஜூன் 28 முதல் ஜந்தர் மந்தரில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

உண்ணாவிரதத்தைத் தொடங்கியதிலிருந்து வாங்சுக் சுமார் 8.5 கிலோ எடை இழந்துள்ளதாக கூறப்படுகிறது. எதிர்க்கட்சித் தலைவர்கள், அருந்ததி ராய், நடிகர்கள் நசிருதீன் ஷா மற்றும் ரத்னா பதக் ஷா, மற்றும் பொருளாதார நிபுணர் ஜெயதி கோஷ் உள்ளிட்ட பலர் வாங்சுக்கை உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறும் அவரிடம் வேண்டுகோள் வலியுறுத்தியுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.