வெள்ளலூரில் பெரியார் சிலை அவமதிப்பு: தி.க தலைவர் கி.வீரமணி கண்டனம்

கோயம்புத்தூர், வெள்ளலூரில் பெரியார் சிலைக்கு செருப்புமாலை போட்டிருப்பதைக் கண்டித்தும், அதன் பின்னணியில் இருப்பவர்களின்மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், வெள்ளலூரில் பெரியார் சிலைக்கு…

கோயம்புத்தூர், வெள்ளலூரில் பெரியார் சிலைக்கு செருப்புமாலை போட்டிருப்பதைக் கண்டித்தும், அதன் பின்னணியில் இருப்பவர்களின்மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், வெள்ளலூரில் பெரியார் சிலைக்கு நேற்றிரவு மர்மநபர்கள் செருப்பு மாலை போட்டுள்ளனர். பெரியார் சிலை அவமதிக்கப்படும் செயல் திட்டமிட்ட வகையில் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், குற்றவாளிகள்மீதான நடவடிக்கைகள், தண்டனைகள் என்பது மிகவும் மெத்தனமாகவே நடப்பது என்பது, இதுபோன்ற குற்றச் சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு மேலும், உற்சாகத்தை அளிப்பதாக அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

கண்டுபிடிக்கப்பட்டதாக சொல்லப்படும் குற்றவாளிகள் மனநோயாளிகள் என்று சொல்லி, இத்தகைய வழக்கின் கோப்புகள் முடித்து வைக்கப்படும் போக்கு, காவல்துறையின் நடைமுறையாக ஆகிவிட்டதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

https://twitter.com/AsiriyarKV/status/1480089600773087233

பெரியார் பிறந்த நாள் சமூகநீதி நாள் என்றும், இந்த அரசு பெரியார் கொள்கை வழி செயல்படும் அரசு என்றும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருப்பதும், சமூகநீதியில், முதலமைச்சர் தொடர்ந்து செய்துவரும் சாதனைகள் இந்தியா முழுவதும் பாராட்டப்படுவதுமான ஒரு காலகட்டத்தில், பெரியார் சிலை அவமதிக்கப்படுவதை இணைத்துப் பார்க்கவேண்டும் என அவர் கூறியுள்ளார்.

முதலமைச்சர், இந்த சம்பவத்தில் முக்கிய கவனம் செலுத்தி, காவல்துறையை முடுக்கிவிட்டு குற்றவாளிகள் மற்றும் அதன் பின்னணியில் இருப்பவர்கள்மீது உரிய நடவடிக்கையை சரியான வகையில் எடுத்து விரைவுப்படுத்தவேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும், குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டனர் என்ற நிலை உருவாகும்போதுதான், இதற்கொரு முடிவு கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டை அமளிக்காடாக ஆக்கவேண்டும் என்று சிலர் முயற்சிக்கிறார்கள் என்பதையும் அரசு கவனத்தில் கொண்டு இந்தப் பிரச்சினையை அணுகவேண்டும் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.