முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பேரறிவாளனின் விடுதலையை எதிர்பார்த்து ஆவலோடு காத்திருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
பேரறிவாளன் விடுதலை குறித்தும் உச்சநீதிமன்ற வழக்கு தொடர்பாகவும் நியூஸ் 7 தமிழுக்கு தொல்.திருமாவளவன் பிரத்யேகமாக பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
பேரறிவாளன் விடுதலையை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். கால தாமதம் ஏற்படுத்திய ஆளுநரின் நடவடிக்கை விமர்சனத்துக்குரியது. ஆளுநர் திட்டமிட்டு காலம் தாழ்த்துவது போன்று தோன்றுகிறது. தமிழக அரசின் வாதம் விடுதலைக்கான தீர்ப்பு வரை கொண்டு வந்துள்ளது என்றார் அவர்.
பேரறிவாளன் வழக்கில், உச்சநீதிமன்றம் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கவுள்ள நிலையில் தொல்.திருமாவளவன் இவ்வாறு தெரிவித்தார். கடந்த 1991-ஆம் ஆண்டு மே 21-ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டு மூலம் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் 1991-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 11-ஆம் தேதி பேரறிவாளன் கைது செய்யப்பட்டார்.
இந்தப் படுகொலை தொடர்பாக விசாரணை மேற்கொண்ட சிறப்பு நீதிமன்றம், நளினி, முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட 26 பேருக்கும் 1998-ஆம் ஆண்டு ஜனவரி 28-ஆம் தேதி தூக்குத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.








