ஆஸ்திரேலிய மண்ணில் சாதித்து, சொந்த ஊர் திரும்பிய கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு கிராம மக்கள் மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.
சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியைச் சேர்ந்த, இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நடராஜன், ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் டி20, ஒருநாள், டெஸ்ட் என மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் அறிமுகமாகி சாதித்தார். குறிப்பாக, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி வெல்ல நடராஜன் முக்கிய காரணமாக இருந்தார்.
இந்திய அணியின் வலிமையான வேகப்பந்து வீச்சாளராக பெயர் பெற்றுள்ள தமிழக வீர்ர் நடராஜன், இன்று மாலை சொந்த ஊரான சின்னப்பம்பட்டி திரும்பினார். அங்கு அவரை, கிரிக்கெட் ரசிகர்களும், கிராம மக்களும் பெருந்திரளாக திரண்டு உற்சாகமாக வரவேற்றனர். மேளதாளங்கள் முழங்க, மாலை அணிவித்து, குதிரை பூட்டப்பட்ட சாரட் வண்டியில் நடராஜனை ஏற்றி, கிராம மக்கள் ஆரவாரத்துடன் ஊர்வலமாக வீடு வரை அழைத்து சென்றனர்.







