இந்தியா – சீனா இடையே நிலவும் எல்லை பிரச்னைக்கு பேச்சுவார்த்தையே தீர்வு தரும் என்று திபெத்திய புத்தமத தலைவர் தலாய் லாமா தெரிவித்துள்ளார்.
திபெத்தின் ஆன்மீகத் தலைவரான தலாய் லாமா, ஹிமாச்சலப்பிரதேசத்தின் தரம்சாலாவில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், இன்று அவர் புத்தமதத்தவர்கள் அதிகம் வசிக்கும் லடாக் யூனியன் பிரதேசத்திற்குச் சென்றுள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் இருந்து பிரிக்கப்பட்டு லடாக் தனி யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்ட பிறகு முதன்முறையாக தலாய் லாமா அங்கு சென்றுள்ளார்.
லடாக் தலைநகர் லே வந்தடைந்த தலாய் லாமாவை, நூற்றுக்கணக்கான புத்தமதத்தவர்கள் இசை இசைத்தும் பூக்களைத் தூவியும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர், பக்தர்களுக்கு அவர் ஆசி உரை வழங்கினார்.
முன்னதாக, தலாய் லாமா நேற்று ஜம்மு வந்தபோது, அங்கும் நூற்றுக்கணக்கான லடாக் மக்கள் அவரை வரவேற்றனர்.
ஜம்முவில் இருந்தபடி, சீனாவுக்கு அவர் செய்தி தெரிவித்தார். அப்போது, சீனாவிடம் இருந்து திபெத்திற்கு சுதந்திரத்தை தான் கோரவில்லை என்றும் திபெத்தின் புத்தமத கலாச்சாரத்தை பாதுகாக்கும் நோக்கில் தன்னாட்சியையே கோருவதாகவும் விளக்கம் அளித்தார்.
தான் கோருவது இதைத்தான் என்பதை புரிந்து கொண்டிருப்பதால் பெரும்பாலான சீனர்கள், தலாய் லாமா ஒரு பிரிவினைவாதி என தற்போது எண்ணுவதில்லை என அவர் தெரிவித்தார். ஒரு சில தீவிர இடதுசாரிகள்தான் தன்னை பிரிவினைவாதி என சித்தரிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
இதையடுத்து, ஜம்முவில் இருந்து இன்று அவர் லே புறப்பட்டார். அப்போது செய்தியாளர்கள் அவரிடம், லடாக் பகுதிகளை தன்னுடன் இணைத்துக்கொள்ள வேண்டும் என்ற சீனாவின் எல்லை விரிவாக்க கொள்கை குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு, அதிக மக்கள்தொகை கொண்ட அண்டை நாடுகளான இந்தியாவும் சீனாவும் தங்களுக்கு இடையே நிலவும் எல்லைப் பிரச்னையை பேச்சுவார்த்தை மூலம் அமைதியான வழியில் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்றும், ராணுவ பலத்தை பயன்படுத்துவது காலாவதியானது என்றும் அவர் குறிப்பிட்டார்.
லே வந்துள்ள தலாய் லாமா சுமார் ஒரு மாதம் அங்கிருப்பார் என கூறப்படுகிறது.
எல்லை பிரச்னை காரணமாக லடாக்கை ஒட்டிய எல்லையில் சீன ராணுவம் தனது படைகளை குவித்துள்ளது. பதிலுக்கு இந்திய ராணுவமும் படைகளை குவித்துள்ளது. இந்நிலையில், தலாய் லாமாவின் லடாக் பயணம் கவனத்தை ஈர்ப்பதாக அமைந்துள்ளது.










