90களில் தமிழ் சினிமாவின் அசைக்கமுடியாத வசூல் சக்கரவர்த்தியாக வலம்வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாபா படத்தின் மூலமாக தன்னுடைய 20ம் நூற்றாண்டின் வெற்றிக்கணக்கை தொடங்க நினைத்தார். ஆனால், வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய அடியை கொடுத்தது பாபா. அப்படத்தின் தோல்வியால் தயாரிப்பாளர்களே தன்னை பார்த்து ஜெர்க் ஆனார்கள் என்று ரஜினியே கூட குறிப்பிட்டிருப்பார். இந்நிலையில் ‘நான் யானை இல்ல குதிரை’ என்று சொல்லி அடுத்த வீறுகொண்டு எழுந்த ரஜினிகாந்த் சந்திரமுகியின் மூலமாக சரித்திர வெற்றியை அடைந்தார். தமிழ் சினிமாவில் இன்று வரை திரையரங்கில் அதிக நாட்கள் ஓடிய படம் சந்திரமுகி.
இந்தப் படம் கன்னட படமான அப்தமித்ராவின் ரீமேக் ஆகும். அந்த அப்தமித்ரா, மலையாளப் படமான மணிசித்ரதாழுவில் இருந்து ரீமேக் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் சந்திரமுகி படத்தின் தொடர்ச்சியாக(sequel) அதன் இரண்டாம் பாகம் எடுக்கப்படும் என்றும் அதிலும் ரஜினிகாந்தே நடிப்பார் என்றும் நீண்டநாட்களாக எதிர்ப்பார்க்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ராகவா லாரன்ஸ் நடிப்பில் சந்திரமுகி-2 எடுக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில் லைக்கா நிறுவனமானது பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் சந்திரமுகி -2 எடுக்கப்போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டது.
ரஜினியின் கடந்த இரண்டு படங்களான தர்பார், அண்ணாத்த சரியாக போகாத நிலையில் சந்திரமுகி-2 மூலம் மீண்டும் ஒரு விஸ்வரூப வெற்றியை கொடுப்பார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் இப்படத்தில் அவர் இடம்பெறாதது அவரின் ரசிகர்களிடையே சிறிய ஏமாற்றத்தை கொடுத்தது என்றே சொல்லலாம். பொதுவாக தமிழ் சினிமாவை எடுத்துக்கொண்டால் ஏதோனும் ஒரு படம் மாபெரும் வெற்றிபெற்றால் அதன் இரண்டாம் பாகம் எடுக்கிறோம் என்று கேமிராவை தூக்கிக்கொண்டு சென்று சொதப்பியெடுப்பார்கள். லாரன்ஸே கூட முனி காஞ்சனா 1,2,3 என பல்வேறு சாகசங்களை செய்ததை பார்த்தோம். ஆனால் சூப்பர் ஸ்டாரை பொறுத்தவரை ஒருமுறை வெற்றிபெற்றால் அந்த படத்தை அப்படையே விட்டுவிடுவார். மீண்டும் அதேபோலதொரு படத்தை எடுக்கிறேன் என்று உள்ளதையும் கெடுக்க விரும்ப மாட்டார். மேடை ஒன்றில் பாட்ஷா படம் பற்றி பேசும் போது, ‘எல்லாரும் பாட்ஷா மாதிரி இன்னொரு படம் கொடுங்கன்னு கேட்டாங்க.. நான் தெளிவா சொல்லிட்டேன் ஒரு அண்ணாமலை, ஒரு பாட்ஷா தான்.. அதை அப்படையே விட்டுடனும் அதுதான் நாம அந்த படத்துக்கு செய்யுற மரியாதை’ என்று கூறினார். ஆக சூப்பர்ஸ்டாரை பொறுத்தவரை ‘ஒரு படம் எடுத்தாலே..நூறு படம் எடுத்தமாதிரி தான்’ என்று கூறுகின்றனர் சினிமா ஆர்வலர்கள்.
சந்திரமுகியின் வெற்றிக்கு ரஜினி எவ்வளவு காரணமே அதே அளவுக்கு வடிவேலுவின் நகைச்சுவையும் காரணம். இந்நிலையில் சூப்பர் ஸ்டார் இல்லையென்றாலும் முருகேசனாக நடித்து பட்டையை கிளப்பிய வைகைப்புயல் வடிவேலுவும் இப்படத்தில் நடிக்கிறார் எனும் மகிழ்ச்சியான செய்தியை உறுதி செய்தது படக்குழு. சந்திரமுகி கதையின் தொடர்ச்சியாகவே இப்படம் அமையுமா அல்லது தனி கதையாக முன்னெடுப்பார்களா என்பது பற்றிய தகவல் இன்னும் உறுதியாகாத நிலையில் லாரன்ஸ் படத்தில் இடம்பெற்றிருப்பதால் அவருடைய ஸ்டைலில் தனிக்கதையாகவே இருக்கலாம் என்றும் கணிக்கப்படுகிறது. மேலும் சந்திரமுகி போல பேய் இல்லாத பேய் படமாக இருக்குமா அல்லது ராகவா லாரன்ஸின் பேய் படங்கள் போல், பேய் உள்ள பேய் படமாக இருக்குமா என்ற கேள்விகளும் எழுந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் இரண்டும் கலந்த கலவையாக இப்படம் இருக்கப்போகிறது எனவும் இணையத்தில் சிலர் கிண்டலடித்து வருகின்றனர்.
ஏற்கனவே பி.வாசு இயக்கத்தில் லாரன்ஸ் , வடிவேலு நடிப்பில் சிவலிங்கா எனும் பேய் படம் வெளியானது குறிப்பிடப்பட்டது. இந்த படமும் கன்னடத்தில் பி.வாசு இயக்கிய சிவலிங்கா படத்தில் இருந்து ரீமேக் செய்யப்பட்டது. இருந்தும் கன்னட படம் அளவிற்கு தமிழ் சிவலிங்கா ஹிட் அடிக்கவில்லை. இந்நிலையில் அதே பி.வாசு, லாரன்ஸ், வடிவேலு கூட்டணியில் உருவாக உள்ள சந்திரமுகி 2 குறித்த எதிர்ப்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
சந்திரமுகி படத்தின் வெற்றியில் முக்கிய பங்காற்றியது வித்தியாசாகரின் இசைதான். இந்நிலையில் சந்திரமுகி 2-ல் அவர் இடம் பெறாதது ஆடியன்ஸுக்கு ஏமாற்றத்தை தந்தாலும் பாகுபலி உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த கீரவானி இப்படத்திற்கு இசையமைத்திருப்பதால் எதிர்ப்பார்ப்பையும் கூட்டியுள்ளது.
Hi friends and fans, Today Chandramukhi 2 shooting begins in Mysore with my Thalaivar and guru’s @rajinikanth blessings! I need all your wishes! 🙏🏼🙏🏼 #Chandramukhi2 pic.twitter.com/dSrD3B5Xwh
— Raghava Lawrence (@offl_Lawrence) July 15, 2022
இதனைத்தொடர்ந்து சந்திரமுகி படப்பிடிப்பு மைசூரில் தொடங்கியுள்ள நிலையில் ஷூட்டிங் செல்வதற்கு முன்பாகவே சூப்பர் ஸ்டாரை நேரில் சந்தித்த ரஜினி அவரின் காலில் விழுந்து ஆசிவாங்கி அந்த புகைப்படங்களை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார் ராகவா லாரன்ஸ்.







