ஒரு வயலினோட இசை என்ன சுவையில் இருக்கும்? சாக்லேட்டோட சுவை என்ன நிறத்தில் உங்களுக்கு தெரியும்? ’அ’ என்ற எழுத்து என்ன நிறத்தில் உங்களுக்கு தெரியும்? என்னடா இது பொருந்தாத மாதிரியே கேள்விகள் கேட்கிறார்களே என யோசனை செய்கிறீர்களா? அதான் இல்ல. நான் இப்போது குறிப்பிட்டிருக்கும் கேள்விகள் உலகத்தில் உள்ள 2-5% பேருக்கு பொருந்தும். அவர்களால் இதற்கெல்லாம் பதில் சொல்ல முடியும். ஆச்சரியமாக இருக்கிறதா? இதை பற்றிய விரிவான தகவல்கள் பின்வருமாறு…
மேலே குறிப்பிட்டிருக்கும் கேள்விகள் மாதிரியே வெகு சில மனிதர்களால் ஒரு இசைய சுவைக்கவோ, ஒரு எழுத்தை நிறமாக பார்க்கவோ அல்லது ஒரு நிறத்தை ஒரு குறிப்பிட்ட சத்தமாக கேட்கவோ முடியுமாம். இந்த திறனுக்கு பெயர் தான் சினஸ்தீசியா.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
“சினெஸ்தீசியா” என்ற பெயருக்கு “ஒன்றாக உணர்தல்” என அர்த்தம். இந்த திறன் கொண்டவர்கள் சினெஸ்தீட்ஸ் என்று அழைக்கப்படுவர். மூளையில் ஒரு தூண்டுதல், ஒரு உணர்வை தான் ஏற்படுத்த வேண்டும். ஆனால் ஒருவருக்கு பல உணர்வுகளையும் அது தூண்டிவிட்டால், அதற்கு பெயர் தான் சினஸ்தீசியா. இன்னும் எளிமையாக சொல்ல வேண்டுமென்றால், ஒரு இசைய கேட்கும் போது சாதாரண நபருக்கு கேட்கும் திறன் மட்டும் தான் தூண்டிவிடப்படும். ஆனால், இந்த சினஸ்தீசியா இருக்கும் நபர்களுக்கு கேட்கும் திறனோட பார்க்கும் திறனும் தூண்டிவிடப்படுமாம். இதனால் ஒரு இசையை கேட்கும் போது அவர்களுக்கு ஒரு நிறமோ அல்லது அது ஒரு சுவையோ தெரியுமாம். இப்படி பட்டவர்களோட மூளை ஒரு பெயரோடு ஒரு வண்ணத்தையும் சேர்த்து பதிவு செய்து வைத்துக்கொள்ளுமாம்.
உதாரணத்திற்கு, ‘அ’ என்ற எழுத்து நீல நிறத்தில் தெரிந்தால், இன்னும் 10 வருடங்கள் கழித்து ’அ’ என்ற எழுத்து 90% சினஸ்தீசியா இருப்பவர்களுக்கு நீல நிறத்தில் தான் தெரியுமாம். அதே போல, சினஸ்தீசியா உள்ள அனைவருக்கும் இந்த ’அ’ என்ற எழுத்து ஒரே மாதிரியான நிறத்தில் தான் தெரியவேண்டும் என்ற அவசியம் இல்லை என ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர்.
சினஸ்தீசியா பிறக்கும்போதே அனைவருக்கும் இருக்குமாம். நாம் வளர வளர நம்முடைய மூளை தானாகவே இதை சரி செய்து சீரான நிலையில் செயல்பட தொடங்குமாம். ஆனால், உலகத்தில் உள்ள 2-5% பேருக்கு மட்டும் இத்திறன் சீராகாமல் இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர். நீரிழிவு நோய் மாதிரி, சினஸ்தீசியாவும் மரபு வழியாக வருவதற்கான வாய்ப்புகள் உண்டு என மருத்துவர்கள் கூறுகின்றனர். ஒரு விபத்துக்கு பிறகோ அல்லது கஞ்சா போன்ற போதை பொருட்களை பயன்படுத்திய பிறகோ சாதாரணமாக இருந்த மக்கள் கூட சினஸ்திசியாவை உணருவதாக சொல்கின்றனர்.
சினெஸ்தீசியா ஒரு நோயோ அல்லது மூளையில் ஏற்படும் கோளாறோ அல்ல. இது உங்க ஆரோக்கியத்திற்கு எந்த தீங்கும் விளைவிக்காது. இது இருப்பதால் நீங்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் அர்த்தம் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். சினஸ்தீசியா உள்ளவர்கள் பார்க்கும் உலகம் மிகவும் அழகானதாகவும், வண்ணமயமானதாகவும் இருப்பதால், இதை ஒரு வரமாக தான் பலர் கருதுகிறார்களாம். சாதரண நபர்களுக்கு இருக்கும் மூளைத் திறனை விட, சினஸ்தீசியா இருக்கும் நபர்களுக்கு IQ அதிகமாக இருக்கும் என்றும், நினைவாற்றல் மற்றும் படைப்பாற்றல் அதிகமாக இருக்கும் என்றும் சில ஆய்வுகள் சொல்கிறது.
இதை உறுதிபடுத்தும் விதமாக, விஞ்ஞானி நிக்கோல டெஸ்லாவுக்கு ஓசையெல்லாம் ஒரு நிறமாக தெரியுமாம், மர்லின் மன்ரோவுக்கு ஒரு சுவை, ஒரு நிறமாக தெரியுமாம். குறிப்பாக இசையமைப்பாளர், பாடகர் என பன்முக திறமை கொண்ட ஃபாரல் வில்லியம்ஸ்-க்கு ஒவ்வொரு இசை குறிப்பும் ஒவ்வொரு நிறைமாக தெரியுமாம். இதை பற்றி Seeing Sounds என்ற பெயரில் ஒரு ஆல்பமே அவர் உருவாக்கியிருக்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.
சமீபத்தில் பார்த்த Wednesday சீரிஸில் வரும் வெட்னஸ்டே ஆடம்ஸ் மாதிரி நிஜ உலகத்திலும் பலருக்கு இந்த சினஸ்தீசியா மாதிரியான சூப்பர் பவர்ஸ் இருக்கு என்றுதான் சொல் வேண்டும்.