கூடலூர் பகுதியில் சங்கர் என்ற யானையை பிடிக்க கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன.

நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த சேரம்பாடி பகுதியில் கடந்த 10 நாட்களாக சங்கர் என்ற காட்டு யானை வலம் வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் இருக்கின்றனர். இந்நிலையில் அந்த யானையை பிடிப்பதற்காக முதுமலை பகுதியில் இருந்து சுமார் ஐந்து கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. யானை சங்கரை பிடிக்க அண்ணன் தம்பியான சுஜய், விஜய் என்கிற கும்கி யானைகள் களமிறங்கியுள்ளன.

மேலும் சங்கர் யானையுடன் இரண்டு பெண் யானைகள் ஒரு குட்டியுடன் அப்பகுதியில் திரிந்து வந்துள்ளது. எனினும் மருத்துவ குழு சங்கர் யானையை அடையாளம் கண்டு மயக்க ஊசி செலுத்தியுள்ளனர். பின்னர் மயக்க ஊசியுடன் அந்த யானை அடர்ந்த வனப்பகுதிக்கு சென்று விட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர். இதனையடுத்து, சங்கரை பிடிப்பதற்கு சீனிவாசன் என்ற கும்கி யானையை இறக்கியுள்ளதாகவும், முக்கிய மருத்துவ குழு ஒன்று வருவதாகவும் வனத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் கும்கி யானைகளுடன் பொது மக்கள் செல்ஃபி எடுத்து மகிழும் காட்சி அனைவரையும் கவர்ந்துள்ளது.







