பதான் படத்தின் வெற்றி, நேமறையான சிந்தனையின் வெற்றி என்றும், பாஜகவின் எதிர்மறை அரசியலுக்கு தக்க பதிலடி என்றும் சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ஷாருக்கான் நடிப்பில் பதான் திரைப்படம் ஜனவரி 25ம் தேதி வெளியானது. யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் ஜான் ஆப்ரஹாமும் சிறப்பு தோற்றத்தில் சல்மான்கானும் நடித்துள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பதான் படத்தின் பாடல் மற்றும் ட்ரைலர் வெளியானது முதலே பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வந்தது. தீபிகா படுகோன் காவி நிறத்தில் கவர்ச்சி உடை அணிந்து பேஷாரம் ரங் பாடலில் தோன்றியதாக, கடும் சர்ச்சை எழுந்தது. மேலும் பதான் படத்திற்கு வலது சாரி அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தின.
இதனிடையே, ஜனவரி 25ம் தேதி உலகம் முழுவதும் சுமார் 100 நாடுகளில் கிட்டத்தட்ட 2500 திரையரங்குகளில் பதான் திரைப்படம் வெளியானது. சமீபகாலமாக இந்தி திரைப்படங்கள் பெரிதளவிலான வரவேற்பைப் பெறாததால், பதான் படத்தின் ரிசல்ட் பாலிவுட்டில் அதிக எதிர்பார்ப்பை கொண்டிருந்தது.
அந்த எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதமாக, பதான் திரைப்படம் வசூலைக் குவித்து, பாகுபலி, கேஜிஎஃப் 2 படங்களின் சாதனைகளை முறியடித்தது. இதுவரை, உலகளவில் 600 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் பதான் படத்தின் வெற்றி குறித்து சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “பதான் திரைப்படம் சூப்பர்ஹிட் ஆனது, நாட்டிலும் உலகிலும் உள்ள நேர்மறையான சிந்தனையின் வெற்றியாகும். மேலும் இது பாஜகவின் எதிர்மறை அரசியலுக்கு தக்க பதிலடி” என்று தெரிவித்துள்ளார்.