”தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்றிருந்தால் உயர்கல்விக்கு உதவியாய் இருந்திருக்கும்” என தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க தகுதியிருந்தும் வாய்ப்பை இழந்த மாணவி நியூஸ் 7 தமிழிடம் வேதனை தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெறும் பள்ளி மாணவர்களுக்கான தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவகளில் ஒருவர் கூட பங்கேற்கவில்லை என்ற அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது. 247 மாணவ, மாணவியர்களின் விளையாட்டு வாழ்க்கையை பறித்திருக்கும் அவலநிலைக்கு யார் காரணம் என்ற கேள்வி எழுந்துள்ளது.
அகில இந்திய பள்ளி விளையாட்டுக் குழுமம் சார்பில் ஜூன் 6 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை பள்ளி மாணவர்களுக்கான தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகள் நடத்துவதற்கான அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது. தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பப்பட்டன. கொரோனா பரவல் காரணமாக மூன்று ஆண்டுகள் நடைபெறாமல் இருந்த போட்டி என்பதால் பள்ளி மாணவர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.
தமிழ்நாட்டில் இருந்து 127 மாணவர்கள், 120 மாணவியர்கள் என மொத்தம் 247 பேர் பங்கேற்பதாக இருந்தனர். பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளின் மெத்தனப்போக்கு காரணத்தினாலும், தகவல் பரிமாற்றத்தில் ஏற்பட்ட குளறுபடிகள் காரணத்தினாலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் கூட இப்போட்டிகளில் கலந்து கொள்ள முடியா சூழல் உருவாகியுள்ளது.
தேசிய அளவில் நடைபெறும் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை பெறும் மாணவர்களுக்கு உயர்கல்வி, வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு வழங்கப்படுகின்றன. தமிழக அரசு சார்பில் தங்கம் வெல்வோருக்கு 2 லட்சம் ரூபாய், வெள்ளி வெல்வோருக்கு 1.50 லட்ச ரூபாய், வெண்கலம் வெல்வோருக்கு 50 ஆயிரமும் ஊக்கத்தொகையாக வழங்கப்படுகின்றன.
இந்நிலையில், SGFI தேசிய அளவிலான மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க தகுதியிருந்தும் வாய்ப்பை இழந்த மாணவி நியூஸ்7 தமிழுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், “SGFI (இந்தியாவில் மாணவர் விளையாட்டு கூட்டமைப்பு) தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க தயாராகி கொண்டிருந்தேன். முறையான தகவல் பரிமாற்றம் இல்லாததால் போட்டியில் கலந்து கொள்ள முடியவில்லை. யார் தவறு செய்தார்கள் என தெரியவில்லை.
தமிழ்நாட்டைத் தவிர்த்து மற்ற மாநிலங்கள் கலந்து கொண்டிருப்பது வருத்தமாக உள்ளது. தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்றிருந்தால் உயர்கல்விக்கு உதவியாய் இருந்திருக்கும். இதற்கு முன் நடந்த தேசிய போட்டிகளில் பதக்கங்களை வென்றுள்ளேன். தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை பதில் அளிக்குமா? ” என அவர் நியூஸ்7 தமிழ் வாயிலாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.








