நாடாளுமன்ற வாயில் மூடல், கண்ணீர்ப்புகை குண்டு வீச்சு – சிஜேபி பேரணியால் பதற்றம்…!

கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் பேரணியால் நாடாளுமன்ற வளாகத்தின் வடக்கு பகுதி நுழைவு வாயில் மூடப்பட்டுள்ளது.

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது. அந்த வகையில் இன்று மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி செல்லும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

ஜந்தர் மந்தரிலிருந்து நாடாளுமன்றம் வரை பேரணியைத் தொடங்கிய கரப்பான் பூச்சி ஜனதா கட்சி ஆதரவாளர்கள் மீது பாதுகாப்புப் படையினர் தடியடி நடத்தினர்.

இந்த நிலையில் போராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தை எட்டியுள்ளனர். இதனால் நாடாளுமன்ற வளாகத்தின் வடக்கு பகுதி நுழைவு வாயில் மூடப்பட்டுள்ளது. மேலும் வளாகத்திற்கு வெளியே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டக்காரர்கள் இந்த நுழைவு வாயில் பகுதிக்கு அருகே வந்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கதவுகள் மூடப்பட்டுள்ளது. மேலும் போராட்டக்காரர்கல் மீது கண்ணீர் புகை குண்டும் வீசப்பட்டுள்ளது.

ஏராளமான எண்ணிக்கையில் துணை ராணுவ படையினர் மற்றும் டெல்லி காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் தொடர் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டு வந்தார். ஆனால் உடல்நிலை மோசம் அடைந்ததால் அவர் வலுக்கட்டாயமாக காவல்துறையினரால் மருத்துவமனையில் அனுமதிப்பட்டார். இந்நிலையில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி அறிவித்தது. தனக்கு ஆதரவான குரலில் உள்ள அனைவரும் இப்பேரணியில் கலந்து கொள்ள வேண்டும் என சோனம் வாங்சுக் கோரிக்கை விடுத்து இருந்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.