என்ன விலை என்றாலும் பரவாயில்லை – ஆடி மாத சீர்வரிசையில் தக்காளி கொடுத்து அசத்திய பெற்றோர்!

தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் வேலூர் அருகே ஆடி மாத சீர்வரிசையில் பெண் வீட்டார் தக்காளி எடுத்து சென்ற சம்பவம் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தை சேர்ந்தவர் கனிஷ்குமார். இவருக்கும்,…

தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் வேலூர் அருகே ஆடி மாத சீர்வரிசையில் பெண் வீட்டார் தக்காளி எடுத்து சென்ற சம்பவம் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தை சேர்ந்தவர் கனிஷ்குமார். இவருக்கும், பள்ளிகொண்டாவை சேர்ந்த லீலா பிரியாவுக்கும் சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

வழக்கமாக ஆடி மாதத்தில் புதிதாக திருமணம் ஆன பெண்ணை, பெண் வீட்டார் சீர்வரிசை கொடுத்து தாய் வீட்டுக்கு அழைத்து செல்வது வழக்கம். ஆடி மாதம் முடிந்தவுடன் பெண்ணை மீண்டும் கணவன் வீட்டுக்கு அனுப்பி வைக்கும் நடைமுறை பரவலாக உள்ளது. இந்நிலையில் ஆடி மாதம் பிறக்கப்போவதை முன்னிட்டு மகளை தாய் வீட்டுக்கு அழைத்து செல்வதற்காக சீர்வரிசையுடன் பெண் வீட்டார் கே.வி.குப்பத்தில் உள்ள கணவர் வீட்டுக்கு சென்றனர்.

சீர்வரிசை தட்டில் மாம்பழம், திராட்சை, இனிப்பு பலகாரங்கள், தேங்காய் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட பொருள்கள் இருந்தது. இதில் விசேஷம் என்னவென்றால் கிலோ 100 முதல் 150 ரூபாய் வரை விற்கும் தக்காளியும் இடம் பெற்றிருந்தது.

தக்காளி என்ன விலை என்றாலும் பரவாயில்லை, மகளுக்கு வைக்கப்படும் சீர்வரிசைதான் தானே முக்கியம் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர். உயர்ரக பழங்களுடன் சீர்வரிசை தட்டில் வைக்கப்படும் அளவிற்கு தக்காளிப்பழம், சீர்வரிசை தட்டில் இடம்பெற்றிருந்தது வியப்பாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.