உக்ரைன் நாட்டில் சிக்கியுள்ள தங்கள் பிள்ளைகளை, மீட்டு அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கன்னியாகுமரி அருகே உள்ள குண்டல் பகுதியைச் சேர்ந்த சகாய ஆண்டனி என்பவரின் மகள்கள், கிரேஸ் ஸ்டெப்லின், அபர்ணா ஸ்வீட்டி ஆகியோர் உக்ரைன் நாட்டில் உள்ள வினிசியா பகுதியில் உள்ள பல்கலைக்கழகத்தில் 6-ஆம் ஆண்டு மருத்துவம் படித்து வந்தனர். போர் தொடங்கியதால், அவரது இரண்டு மகள்களும் தோழிகளுடன் புறப்பட்டு ருமேனியா எல்லைக்கு வந்ததாகவும், ஆனால் எல்லை மூடப்பட்டுள்ளதால், அவர்கள் அங்கேயே தவித்து வருவதாகவும் சகாய ஆண்டனி தெரிவித்துள்ளார். மேலும், ருமேனிய எல்லையில் இந்திய மீட்புக்குழுவினர் யாரும் இல்லாததால், அங்கு 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தவித்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து, தங்கள் மகள்களையும், சக மாணவர்களையும் மீட்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.
இதேபோல, உக்ரைனில் உள்ள மதுரையைச் சேர்ந்த ஜெஜிமா பேகம், மெஜஸ்டிக் பிரின்ஸ் போஸ்வா, சோபியா, நிலபர் நிஷா ஆகிய 4 மாணவர்களை மீட்க வலியுறுத்தி அவர்களது பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், தங்கள் பிள்ளைகள் தங்கியிருக்கும் இடத்தின் அருகே தொடர்ந்து குண்டுகள் விழுவதாகவும், இதனால், அவர்கள் அச்சத்துடன் இருப்பதாகவும் தெரிவித்தனர். எனவே, தங்கள் பிள்ளைகளை மீட்க மத்திய, மாநில அரசுகள் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டனர். இதற்கிடையே, உக்ரைனில் உள்ள தங்கள் பிள்ளைகளை மீட்கக்கோரி, மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இதுவரை 10 மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே, உக்ரைனில் தங்கியிருந்த திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியை சேர்ந்த ஹர்சவர்தன் என்ற மாணவர் ஹங்கேரி வழியாக இந்தியா திரும்பி தற்போது சொந்த ஊரான காங்கேயத்திற்கு வந்துள்ளார். தம்மை சொந்த ஊருக்கு அழைத்து வந்த மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்த அவர், மேலும் அங்கு சிக்கியுள்ள மாணவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
உக்ரைனில் நிலவி வரும் போரினால் வீட்டின் கீழ்தளத்தில் வசித்து வரும் தங்களுக்கு உணவு, தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைக்கவில்லை என தமிழகத்தை சேர்ந்த மாணவி ஹரிணி தெரிவித்துள்ளார். இந்நிலையில், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள கீழ வீதியில் உள்ள ஹரினியின் வீட்டிற்கு சென்ற முன்னாள் அமைச்சர் காமராஜ், அவரது பெற்றோரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். வீடியோ காலில் பேசிய மாணவி ஹரினி, உக்ரைனில் உள்ள மாணவர்களை மீட்க இந்திய அரசும் தமிழ்நாடு அரசும் விரைவாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.







