ஒவ்வொரு மனிதருக்குள்ளும் உள்ள புறத்தடைகளை உடைக்க வேண்டும் என்பதே “நான் முதல்வன்” திட்டத்தின் நோக்கம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு திட்ட தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது. நிகழ்வில் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் இறையன்பு, டிஜிபி சைலேந்திர பாபு, கல்வித்துறை அதிகாரிகள், கல்வியாளர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
திட்டத்தை தொடங்கிவைத்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டு மாணவர்கள், இளைஞர்கள் அனைவரும் அனைத்திலும் முதல்வனாக வர வேண்டும் என்பதே “நான் முதல்வன்” திட்டத்தின் நோக்கம் என்றார்.
படித்த அனைவருக்கும் வேலை கிடைத்ததா என்றால் அது கேள்விக்குறியே. வேலை உள்ளது. ஆனால், தகுதியான வேலை இல்லை என்பதே கவலைக்குரியதாக உள்ளது என்ற அவர், “படித்திருக்கிறார்கள்; ஆனால் போதிய திறமை இல்லை. மாணவர்களின் திறமை குறைவு பற்றியும் கவலைப்பட வேண்டிய சூழலில் நாம் தத்தளித்துக்கொண்டுள்ளோம். இளைய சக்தி முழுமையான திறமை உடையதாக இருக்கிறதா? என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும்” என்றும் கூறினார்.
ஒவ்வொரு மனிதருக்குள்ளும் உள்ள புறத்தடைகளை உடைக்க வேண்டும் என்பதே “நான் முதல்வன்” திட்டத்தின் நோக்கம் என்ற அவர், அரசு நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களை ஒருங்கிணைக்கும் நடவடிக்கையில் இறங்கி உள்ளோம், வேலை என்பது சம்பளம் சார்ந்து அல்லாமல் திறமை சார்ந்ததாக மாற வேண்டும் மாணவர்கள், இளைஞர்களின் மூத்த சகோதரனாக இருந்து, எனது நேரடி மேற்பார்வையில் உங்களின் எதிர்காலத்தை வளமாக்க முடிவு செய்துள்ளேன் என்றும் கூறினார்.