இந்தியாவுடன் அமைதியான உறவை பாகிஸ்தான் விரும்புவதாக புதிதாகப் பதவியேற்றுள்ள பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த நிலையில், பிரதமர் இம்ரான் கானின் பரிந்துரையை ஏற்று நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. இது அந்நாட்டு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து தாமாக முன்வந்து பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தியது. விசாரணை முடிவில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது செல்லாது எனவும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது வாக்கு எடுப்பு நடத்த வேண்டும் என அதிரடியாக அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இதையடுத்து நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில், 342 பேர் கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினர்களில் 174 உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்ததால் இம்ரான் கான் அரசு கவிழ்ந்தது. இதையடுத்து பாகிஸ்தானின் எதிர்க்கட்சித்தலைவர் ஷெபாஸ் ஷெரிப் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில், பாகிஸ்தானின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஷெபாஸ் ஷெரீப்பிற்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி கடிதம் எழுதியிருந்தார். அதற்குப் பதில் அளிக்கும் வகையில் ஷெபாஸ் ஷெரீப் எழுதிய கடிதத்தில் இந்தியாவிடம் இருந்து அமைதி, ஒத்துழைப்பை விரும்புவதாக தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட நிலுவையில் உள்ள பிரச்சனைகளுக்கு அமைதியான முறையில் தீர்வு காண்பது முக்கியம் எனக் கூறியுள்ள ஷெபாஸ் ஷெரீப், இனி பாகிஸ்தான் அரசு சமூக பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்தும் எனவும் பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.







