மணிப்பூர் தலைநகர் இம்பாலின் நியூ லாம்புலேன் பகுதியில் கடைசியாக எஞ்சியிருந்த 10 பழங்குடியின குடும்பங்களும் காங்போக்பி மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டன.
மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினா், தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்க வலியுறுத்தி வருகின்றனர். அதற்கு குக்கி பழங்குடியின மக்கள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது வெடித்த மோதல் பெரும் வன்முறையாக மாறியது.
இதனையடுத்து சுமார் 4 மாதங்களாக தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே இரு பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட வீடியோ வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனை அடுத்து எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் குழுவினர் மணிப்பூருக்கு சென்று, அங்கு வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்துப் பேசினர்.
இந்த வன்முறையில் இதுவரை 160-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். வன்முறை சம்பவங்களால் வீடுகளைவிட்டு வெளியேறிய ஆயிரக்கணக்கான மக்கள், அரசின் முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். இம்பாலின் நியூ லாம்புலேன் பகுதியில், சுமார் 300 குகி பழங்குடியின குடும்பங்கள் வசித்து வந்தன. அந்த குடும்பங்கள், மற்றொரு தரப்பினரின் தாக்குதலுக்கு இலக்காகலாம் என்பதால், அவா்களை வேறு இடத்துக்கு மாற்றும் நடவடிக்கையை மாநில அரசு மேற்கொண்டது.
இந்நிலையில் நகரின் மையத்தில் அமைந்துள்ள அப்பகுதியில் கடைசியாக எஞ்சியிருந்த 10 பழங்குடியின குடும்பங்களைச் சோ்ந்த 24 போ் நேற்று முன்தினம் (செப். 2) இடமாற்றம் செய்யப்பட்டனர். குகி பழங்குடியினர் அதிகம் வாழும் காங்போக்பி மாவட்டத்தின் மோட்பங் பகுதிக்கு அவர்கள் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டனர். இதனிடையே இம்பாலில் பல ஆண்டுகளாக வசித்த தங்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றியதாக, பழங்குடியின குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
https://twitter.com/PChidambaram_IN/status/1698214848184668663
இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “இம்பாலில் மிச்சமிருந்த குகி பழங்குடியின குடும்பங்களைச் சோ்ந்தவர்கள், அவர்களின் வீடுகளை விட்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். அதாவது, மைதேயி சமூகத்தினா் அதிகமுள்ள இம்பால் பள்ளத்தாக்கில் ‘இன ஒழிப்பு’ நிறைவடைந்துள்ளது. ‘இன ஒழிப்புக்கு’ தலைமை தாங்கும் ஒரு மாநில அரசை, அரசமைப்புச் சட்டப்படி செயல்படுவதாக மத்திய அரசு கூறுவது வெட்கக்கேடானது” என்று கூறியுள்ளாா்.







