மகளிர் உரிமை திட்டத்தை மற்ற மாநிலங்களும் பின்பற்ற தொடங்கியுள்ளதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் 500 மகளிருக்கு அரசின் மகளிர் உரிமைத் தொகை தொடர்பான டெபிட்கார்டுகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
பின்னர் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது :
“ஒரு கோடியே 6 லட்சம் மகளிர் பயன்பெறும் வகையில் தமிழகத்தில் செயல்படுத்தப்படும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்து ஒட்டு மொத்த இந்தியாவும் பாராட்டி வருகிறது. தருமபுரி மாவட்டத்தில் இத்திட்ட பயனாளிகள் 500 பேருக்கு டெபிட் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டத்தில்தான் முதல்முறையாக மகளிர் சுய உதவிக் குழுக்களை அப்போதைய முதல்வர் கருணாநிதி தொடங்கிவைத்தார். அதேபோல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான விண்ணப்பம் பதிவேற்றத்தை தருமபுரி மாவட்டம் தொப்பூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
கர்நாடகா, தெலுங்கான உள்ளிட்ட மாநிலங்களில் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என தேர்தல் வாக்குறுதிகளாக வழங்கி வருகிறது. இத்திட்டத்தை மற்ற மாநிலங்களில் பின்பற்ற தொடங்கியுள்ளனர்.
கலாச்சார ரீதியாகவும், சட்ட ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பெண்கள் முன்னேற்றத்திற்கான தடைகளை தமிழக அரசு அகற்றிவருகிறது. பெண்கல்விக்கு முக்கியத்துவம் அளித்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
பள்ளி படிப்பை முடித்து கல்லூரிகளுக்கு செல்லும் பெண்களுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் அவர்களது வங்கி கணக்கிற்கு மாதந்தோறும் 1000 ரூபாயை அரசு அனுப்பி வருகிறது
கல்வி பயிலவும், வேலைகளுக்கு செல்லும் பெண்களுக்கு நகர பேருந்துகளில் கட்டணமில்லா பயணம் மேற்கொள்ளும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் 31 ஆயிரம் பள்ளிகளில் செயல்படுத்தப்படும் காலை சிற்றுண்டி உணவுத்திட்டத்தில் 17 லட்சம் மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர்.
பெண்கள் கல்வியிலும், பொருளாதாரத்திலும் உயர வேண்டும். பொது வாழ்விலும் ஈடுபட வேண்டும். அப்போதுதான் உங்களுக்கான உரிமைகளை நீங்கள் வலியுறுத்தி பெற முடியும். தற்போது உள்ளாட்சி அமைப்பு பதவிகளில் 50 சதவீம் பெண்கள் உள்ளனர்.
சென்னை, தாம்பரம், கோவை உள்ளிட்ட மாநகராட்சி மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு பெண்கள் வந்துள்ளனர். மகளிர் அனைவரும் சுதந்திரமாக சிந்தித்து நல்லமுறையில் கல்வி கற்று, அரசியலில் ஈடுபட வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.







