சென்னை மெரினா விமான சாகசத்தின் போது உயிரிழந்தவர்களின் உடல் உறுப்புகள், திசுக்கள், ‘விஸ்ரா’ என்ற தடயவியல் கூறாய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இந்திய விமானப் படையின் 92-ம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி, மெரினா கடற்கரையில் கடந்த 6ம் தேதி விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், வெயிலால் 240-க்கும் மேற்பட்டோர் மயக்கம் அடைந்த நிலையில், சிகிச்சை பலனின்றி 5 பேர் உயிரிழந்தனர்.

கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த ஜான் (56), பெருங்களத்துரைச் சேர்ந்த ஸ்ரீனிவாசன் (54), ஆந்திராவைச் சேர்ந்த தினேஷ் குமார் (37), திருவொற்றியூரைச் சேர்ந்த கார்த்திகேயன் (34), மரக்காணத்தைச் சேர்ந்த மணி (37) ஆகியோர் உயிரிழந்தனர். இது தொடர்பாக அண்ணாசதுக்கம் காவல்நிலையம், திருவல்லிக்கேணி காவல் நிலையம், மயிலாப்பூர் காவல் நிலையம், மெரீனா காவல் நிலையம், ராயப்பேட்டை காவல் நிலையங்களில் தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதையும் படியுங்கள் :J&K-ல் வெற்றி பெற்ற காங்கிரஸ்- தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
இதையடுத்து, ராஜீவ் காந்தி மருத்துவமனை, ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனை, ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் உயிரிழந்தவர்களின் உடல்கள் கூராய்வு செய்யப்பட்டன. அதில், இதய செயலிழப்பு, மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாகவும், அதற்கு வெப்ப வாதம் காரணமாக இருக்க வாய்ப்புள்ளதாகவும் தெரியவந்தது.
இந்நிலையில், உயிரிழந்தவர்களின் உடல் உறுப்புகள் மற்றும் திசுக்களை அமில மாற்றத்துக்கு உள்ளாக்கி சோதனை செய்யும், ‘விஸ்ரா’ ஆய்வுக்கு முன்னெடுக்கப்பட்டுள்ளது. உயிரிழப்புக்கான காரணத்தை துல்லியமாக கண்டறிய, சென்னை தடயவியல் துறை இயக்குநரகத்தில், இதற்கான ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.







