அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்த சர்ச்சை தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், ஓபிஎஸ் தவறுமேல் தவறு செய்து வருகிறார் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
நாளை அதிமுக பொதுக்குழு நடைபெற உள்ள நிலையில், ஒற்றைத் தலைமை குறித்த சர்ச்சை தொடர்ந்து நீடித்து வருகிறது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தொடர்ந்து தங்களது ஆதரவு மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதிமுகவில் மொத்தம் 75 மாவட்ட செயலாளர்கள் உள்ளனர். இதில் ஓ.பி.எஸ்க்கு 11 மாவட்ட செயலாளர்களும், இ.பி.எஸ்க்கு 64 மாவட்ட செயலாளர்களும் ஆதரவு தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஒபிஎஸ் ஒத்து போவது நல்லது என முன்னாள் அமைச்சர் சிவபதி கூறியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, சென்னை கிரின்வேஸ் சாலை இல்லத்தில் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்த முன்னாள் அமைச்சரும், அம்மா பேரவைச் செயலாளருமான ஆர்.பி.உதயகுமார் இபிஎஸ்-க்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் வளர்மதி, “அனைவரின் ஏகோபித்த ஆதரவுடன் பொதுக்குழு நடைபெறும்” என்று கூறினார். ஓபிஎஸ் ஓரங்கட்டப்படுகிறாரா என்கிற கேள்விக்கு, “ஓ.பன்னீர்செல்வத்தை எப்படி ஓரங்கட்ட முடியும்? பொதுக்குழுவுக்கு அழைப்பு விடுத்ததே அவர்தான்.” என்று பதிலளித்தார்.
மேலும், “எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கூட்டிய பொதுக்குழுக் கூட்டங்கள் அமைதியாகவே நடந்து முடிந்துள்ளன. நாளைய பொதுக்குழுவையும் உறுப்பினர்கள் அமைதியாக நடத்திக்காட்டுவார்கள். கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் பேசுவது பற்றி, அவர்தான் கூற வேண்டும். நாளை நல்ல செய்தி வரும்” என்று கூறினார்.
இதனையடுத்து இபிஎஸ்-ஐ நேரில் சந்தித்த பின்னர் பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “ஓ.பன்னீர்செல்வம் தவறு மேல் தவறு செய்து வருகிறார். அவர் பொதுக்குழுவில் பங்கேற்பார் என்று நம்புகிறோம். ஊரோடு ஒத்துவாழ வேண்டும். பொதுக்குழு திட்டமிட்டபடி நடைபெறும்” என்று கூறினார்.