குடியரசு தலைவர் தேர்லில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராகும் வாய்ப்பை ஏற்க சரத்பவார், பரூக் அப்துல்லா, கோபாலகிருஷ்ண காந்தி ஆகிய மூவரும் மறுத்துள்ள நிலையில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் யஷ்வந்த் சின்காவை களமிறக்க மம்தா பானர்ஜி முயற்சித்து வருவதாகக் கூறப்படுகிறது.
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் வரும் 29ந்தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில் மத்தியில் ஆளும் பாஜக சார்பிலும், எதிர்க்கட்சிகள் சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை
பாஜக அல்லாத எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து குடியரசு தலைவர் தேர்தலில் பொது வேட்பாளரை களமிறக்க தீவிர முயற்சி எடுத்து வருகின்றன. இதற்காக கடந்த வாரம் மேற்கு வங்க முதலமைச்சரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கூட்டிய கூட்டத்தில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், தேசிய மாநாட்டுக் கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, மகாத்மா காந்தியின் பேரன் கோபாலகிருஷ்ண காந்தி ஆகியோரது பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன, ஆனால் மூவரும் அந்த அழைப்பை ஏற்க மறுத்துவிட்டனர். இந்நிலையில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய நிதியமைச்சர் யஷ்வந்த் சின்காவை களமிறக்க மம்தா பானர்ஜி விரும்புவதாக கூறப்படுகிறது. பாஜகவில் பல்வேறு விஷயங்களில் போர்க்கொடி தூக்கி பரபரப்பை ஏற்படுத்திய யஷ்வந்த் சின்கா, கடந்த ஆண்டு திரிணாமுல் காங்கிரசில் இணைந்தார். 1990ம் ஆண்டு சந்திரசேகர் தலைமையிலான ஆட்சியில் மத்திய நிதியமைச்சராக பதவி வகித்த அவர் பின்னர் வாஜ்பாய் தலைமையிலான ஆட்சியிலும் நிதியமைச்சராக பணியாற்றினார். வாஜ்பாய் ஆட்சியில் வெளியுறவுத்துறை அமைச்சராக பதவி வகித்த அனுபவமும் வாய்ந்தவர் யஷ்வந்த் சின்கா. அவருக்கு தற்போது வரை 4 கட்சிகள் ஆதரவு உள்ளதாகவும், பிற கட்சிகளின் ஆதரவை பெற பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.







