உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் செயல்பாடு விவசாயிகளின் வளர்ச்சி – அமைச்சர்

உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் தொலைநோக்குப் பார்வையுடன் செயல்படுவது, விவசாயிகளின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவிடும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.   வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களை அமைக்கும்…

உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் தொலைநோக்குப் பார்வையுடன் செயல்படுவது, விவசாயிகளின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவிடும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

 

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொகுப்பு அளவிலான வணிக நிறுவனங்களின் செயல்பாடுகளை வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை அலுவலகத்தில் ஆய்வு செய்தார். பின்னர் உரையாற்றிய அவர், தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகளின் வாழ்க்கைத்தரம் மேம்பட பல்வேறு பணிகளை அரசு மேற்கொண்டு வருகின்றது என்றார்.

 

இதனை கருத்தில் கொண்டுதான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வழிகாட்டுதலின்படி, வேளாண்மை-உழவர் நலத்துறைக்காக கடந்த 2 ஆண்டுகளாக தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, நடைமுறைக்கு வந்துள்ளது. உழவர் சந்தையினை, உலகச் சந்தைக்கு கொண்டு செல்வதையும், விவசாயிகளை, வர்த்தகர்களாக மாற்றுவதையும் மிக முக்கிய குறிக்கோளாகக் கொண்டு, வேளாண்மை-உழவர் நலத்துறை பணியாற்றி வருகிறது.

 

​“தனி மரம் தோப்பாகாது” என்ற வாய்மொழிக்கேற்ப, சிறு மற்றும் குறு விவசாயிகளை ஒருங்கிணைத்து, அவர்கள் கூட்டாக பயிர் சாகுபடி திட்டம் தயாரித்து, அதற்கு தேவையான இடுபொருட்களை மலிவு விலையில் பெற்று உற்பத்தி செய்யும் விளைபொருட்களை ஒருங்கிணைத்து நல்ல விலைக்கு விற்பனை செய்திடவும், மேலும் அதிக வருமானம் பெறுவதற்கு விளைபொருட்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்வதற்கும் “உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள்” அணுகுமுறை உருவாகியது என்றார்.

 

உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் தொலைநோக்குப் பார்வையுடன் செயல்படுவது விவசாயிகளின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவிடும். மதிப்புக்கூட்டுதல், ஏற்றுமதி போன்ற செயல்பாடுகளில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். இத்தகைய தொகுப்பு அளவிலான வணிக நிறுவனங்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு தேவைப்படும் தொழில்நுட்ப உதவிகள், வணிக ரீதியான விவரங்கள் ஆகியவற்றை வழங்கிட வேண்டும் என தெரிவித்தார்.

 

தமிழ்நாடு அரசு உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு பயிற்சி வழங்கிட ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. மாவட்டந் தோறும் தற்போது பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றது. உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் பிரதிநிதிகள் இப்பயிற்சிகளில் கலந்துகொண்டு பயன்பெற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.


கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் செயல்பாட்டினை சீரமைப்பது அவசியம் என்ற அவர், உணவு பதப்படுத்துதல் திட்டத்திலும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் பயன்பெறுவதற்கு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது என்றும் திட்ட கருத்துருவில் 35 சதவீத மானியம் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் மானியம் பெற்றிடலாம். இதனை உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் அதிக அளவில் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்றார்.

 

பொதுவான உட்கட்டமைப்பு வசதிக்காக 35 சதவீத மானியம் அதிகபட்சமாக ரூ.3 கோடி வரை பெற்றிடலாம். மானியங்களை பெறுவதற்கு உரிய திட்டக் கருத்துருவினை வங்கி கடனுதவியுடன் தயாரித்து வழங்கி பயன்பெறுமாறும் அமைச்சர் அறிவுறுத்தினார்.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.