காங்கிரஸ் சார்பில் பங்கேற்க வந்த தலைவர்களில் சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து பேசினர்.
பாஜகவுக்கு எதிரான எதிர்கட்சிகளின் 2வது கூட்டம் பெங்களூருவில் இன்று தொடங்குகிறது. இதில், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 26 கட்சிகள் பங்கேற்க உள்ளன. அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில், ஆளும் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சியை பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் முன்னெடுத்துள்ளார். இதன் பலனாக எதிர்கட்சிகளின் முதல் கூட்டம் பீகார் மாநிலம் பாட்னாவில் கடந்த மாதம் 23ம் தேதி நடைபெற்றது.
இந்நிலையில், எதிர்கட்சிகளின் 2வது கூட்டம் பெங்களூருவில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல்காந்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.கஸ்டாலின், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.
மத்திய அரசு கொண்டு வர உள்ள டெல்லி நிர்வாகம் தொடர்பான அவசர சட்டத்திற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவிக்காமல் அமைதியாக இருந்த நிலையில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணு கோபால் டெல்லி அவசர சட்டத்தை எதிர்ப்பதாக தெரிவித்தார். இந்த நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பெங்களூரு எதிர்கட்சிகளின் கூட்டத்தில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் எதிர்கட்சிகளின் கூட்டத்தில் இன்று பங்கேற்கவில்லை என காலை முதலே தகவல்கள் வெளியாகியது. இந்த நிலையில் சரத் பவார் நாளை பங்கேற்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சரத் பவாரோடு கட்சியின் செயல் தலைவரான சுப்ரியா சூலேவும் பங்கேற்க உள்ளார்.
அந்த வகையில், பெங்களூருவில் நடைபெறும் எதிர்கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து புறப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பெங்களூரு சென்றடைந்தார். அங்கு அவரை கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
இந்த நிலையில், காங்கிரஸ் சார்பில் பங்கேற்க வந்த தலைவர்களில் சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து பேசினர். பெங்களூருவில் இன்றும் நாளையும் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெறுகிறது.







