நாட்டின் இறையாண்மைக்கு எதிரான கருத்துகளை வெளியிட்டதாக 150 க்கும் மேற்பட்ட யு டியூப் சேனல்கள் கடந்த 2 ஆண்டுகளில் முடக்கப்பட்டதாக தகவல் ஒலிபரப்பு அமைச்சக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யூ டியூப் சேனல்கள் குறித்து மத்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் தரப்பில் வெளியிட்ட அறிவிப்பின் படி கடந்த 2021-ஆம் ஆண்டு மேதம் மாதம் முதல் தற்போது வரை கிட்டத்தட்ட 2 ஆண்டுகளில் 150-க்கும் மேற்பட்ட இணையதளங்கள் மற்றும் யூ டியூப் செய்தி சேனல்கள் முடக்கப்பட்டுள்ளன. இவை நாட்டிற்கு எதிரான கருத்துகளை பரப்பியதால் தடை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தை சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட இணையதளங்கள் மற்றும் யூ டியூப் சேனல்கள் மத்திய அரசின் இறையாண்மைக்கு எதிரான உள்ளடக்க வீடியோக்களை வெளியிட்டதால் தகவல் தொழில்நுட்ப சட்ட பிரிவு 69ஏ – இன் கீழ் தடைசெய்யப்பட்டுள்ளன.
குறிப்பாக நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு, வெளிநாடுகளுடனான நட்புறவு, பொது ஒழுங்கு போன்ற விவகாரங்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி கடந்த 2 ஆண்டுகளில் 150-க்கும் மேற்பட்ட இணையதளங்கள் மற்றும் யூ டியூப் சேனல்கள் முடக்கப்பட்டுள்ளன.
யூ டியூப் செய்தி சேனல்களை பொறுத்தமட்டில் 12,123,500 – க்கும் அதிகமான சந்தாதாரர்களையும், மொத்தம் 1,320,426,964 பார்வைகளையும் பெற்றுள்ளன. தடை செய்யப்பட்ட சேனல்களில் கபார் வித் ஃபேக்ட்ஸ், கபர் டைஸ், இன்பர்மேஷன் ஹப், ஃப்ளாஷ் நவ், மேரா பாகிஸ்தான், ஹக்கிகத் கி துனியா, அப்னி துனியா டிவி ஆகியவை அடங்கும். இவை கடந்த 2021-ஆம் ஆண்டு பிப்ரவரி கொண்டுவரப்பட்ட புதிய ஐடி விதிகளின் படி தவறான தகவல்களை பரப்பி நாட்டின் இறையாண்மைக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் செயல்பட்ட யூ டியூப் சேனல்கள் முடக்கப்பட்டன என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







