தேனி மக்களவை தொகுதியில் ஓ.பி.ரவீந்திரநாத் பெற்ற வெற்றி செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
2019ம் ஆண்டு நடந்த மக்களவை பொதுத் தேர்தலில், தேனி தொகுதியில்
அதிமுக சார்பில் ஓ.பி.ரவீந்திரநாத் போட்டியிட்டு 76,319 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவரது வெற்றியை செல்லாது என்று அறிவிக்கக் கோரி தேனி தொகுதி வாக்காளர் மிலானி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
அவரது மனுவில் கூறப்பட்டிருந்ததாவது:
வேட்புமனுவில் உண்மை விவரங்களை ஓ.பி.ரவீந்திரநாத்குமார் மறைத்துள்ளார். வருமானத்தை மறைத்துள்ளார் .எனவே அவரது வேட்புமனு ஏற்கப்பட்டது சட்டவிரோதம், அதனால் அவரது வெற்றியை ரத்துசெய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றியை செல்லாது என தீர்ப்பளித்தது. குறிப்பாக, வாணி பின்னலாடை நிறுவனத்தில் இயக்குனராக இருந்தபோது வாங்கிய சம்பளத்தை மறைத்துள்ளார். வாணி ஃபேப்ரிக்ஸ் நிறுவனத்தில் 15 ஆயிரம் பங்குகள் வைத்திருப்பதையும் வேட்பு மனுவில் மறைத்துள்ளார்.
விவசாயத்தில் மட்டுமே வருமானம் கிடைத்தாக கூறிய நிலையில், வட்டி தொழில் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் மூலம் கிடைத்த வருமானத்தையும் மறைத்துள்ளார். 4 கோடியே 16 லட்ச ரூபாய்க்கு அசையும் சொத்துகள் இருக்கக்கூடிய நிலையில், ஒரு கோடியே 35 லட்ச ரூபாய் என்று மட்டுமே வேட்பு மனுவில் காட்டியுள்ளார். இந்த சொத்து விவரங்கள் குறித்து தேர்தல் அதிகாரி முறையான விசாரணை செய்யவில்லை.
பணப்பட்டுவாடா மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் வகையில் சாட்சியையும் மனுதாரர் மிலானி தரப்பில் கொண்டுவரவில்லை. சமூக வலைதளங்களில் பரவிய வீடியோ காட்சிகள் மட்டுமே நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அதனால் பணப்பட்டுவாடா செய்தார் என்பது நிரூபிக்கப்படவில்லை. ஆனால் பணப்பட்டுவாடா தொடர்பான குற்றவழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
அதேவேளையில் 76 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றுள்ளதால், அவர் தகவலை மறைத்தார் என்ற காரணத்தை கூறி அவரது தேர்தல் வெற்றியை செல்லாது என அறிவிக்க முடியாது என்கிற ரவீந்திரநாத் தரப்பு வாதத்தை ஏற்க முடியாது.
சொத்து, கடன், பொறுப்பு, வருமானம் ஆகியவற்றை மறைத்தது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே ஒ.பி.ரவீந்திரநாத் குமாரின் வேட்புமனுவை ஏற்றது முறையற்றது.அதனால் மிலானி தாக்கல் செய்த இந்த தேர்தல் வழக்கை ஏற்றுக்கொண்டு, ஒ.பி.ரவீந்திரநாத் பெற்ற வெற்றி செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்நிலையில், அந்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பி.ரவீந்திரநாத் தற்போது உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




