ஆன்லைன் ரம்மி – பணத்தை இழந்த கல்லூரி மாணவர் விபரீத முடிவு

தலைவாசல் அருகே ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் 75 ஆயிரம் ரூபாய் பணத்தை இழந்த கல்லூரி மாணவர் விஷமருந்தி உயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே உள்ள…

தலைவாசல் அருகே ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் 75 ஆயிரம் ரூபாய் பணத்தை இழந்த கல்லூரி மாணவர் விஷமருந்தி உயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே உள்ள சதாசிவபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சீனிவாசன் மகன் சூரியபிரகாஷ் [20]. இவர் தேவியாக்குறிச்சியில் உள்ள
தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில், மாணவர் சூரியபிரகாஷ் தனது செல்போன் மூலம் அவ்வப்போது ஆன்லைன் ரம்மி விளையாடி பொழுதைக் கழித்து வந்துள்ளார். ஆர்வமாக விளையாடிய ஆன்லைன் ரம்மி விளையாட்டில் தனது தந்தை சீனிவாசன் வங்கிக் கணக்கில் இருந்து 75 ஆயிரம் ரூபாய் பணத்தை சூதாடி தோற்றுள்ளார்.

இதனிடையே மாணவனின் தந்தை சீனிவாசன் நேற்றைய தினம் லோன் கட்டுவதற்காக வங்கியில் இருந்து பணத்தை எடுத்து வரும்படி கூறியுள்ளார். இதனால்
அதிர்ச்சியடைந்த மாணவன் வங்கியில் பணம் இல்லாதது தெரியவந்தால் அப்பா
திட்டுவார் என பயந்து நேற்றிரவு வீட்டில் இருந்த பூச்சி மருந்தைக் குடித்துவிட்டு வீட்டில் உறங்கியுள்ளார்.

இதனையடுத்து அதிகாலையில் எழுந்த பெற்றோர் மாணவர் சூரியபிரகாஷ் வாந்தி
எடுத்து கொண்டிருப்பதைப் பார்த்துள்ளனர். பின்னர், அவரை ஆத்தூர் தனியார்
மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். மாணவன் விஷமருந்தி உயிரிழப்புக்கு முயன்ற சம்பவத்தை அறிந்த ஆத்தூர் ஊரக போலீசார் மருத்துவமனைக்குச் சென்று மாணவனிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில் மாணவன் ஆன்லைன் ரம்மி விளையாட்டி 75 ஆயிரம் ரூபாய் பணத்தை இழந்ததால் பெற்றோர்கள் திட்டுவார்கள் என விஷமருந்தி உயிரிழப்புக்கு முயன்றது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த மானவனை மீட்ட போலீசார் மேல் சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த கல்லூரி மாணவன் விஷமருந்தி உயிரிழப்புக்கு முயன்ற இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.