தமிழ்நாட்டைப் போல் சிக்கிமிலும் அரசு பெண் ஊழியர்களுக்கு ஓராண்டு பேறுகால விடுப்பு!

தமிழ்நாட்டைப் போலவே, அரசுப் பணிகளில் உள்ள பெண் ஊழியர்களுக்கு ஓராண்டு பேறுகால விடுப்பு வழங்கப்படும் என சிக்கிம் மாநில முதலமைச்சர் பிரேம்சிங் அறிவித்துள்ளார். அரசுப் பணியில் உள்ள பெண்கள் தங்களின் பச்சிளம் குழந்தைகளை பேணி…

தமிழ்நாட்டைப் போலவே, அரசுப் பணிகளில் உள்ள பெண் ஊழியர்களுக்கு ஓராண்டு பேறுகால விடுப்பு வழங்கப்படும் என சிக்கிம் மாநில முதலமைச்சர் பிரேம்சிங் அறிவித்துள்ளார்.

அரசுப் பணியில் உள்ள பெண்கள் தங்களின் பச்சிளம் குழந்தைகளை பேணி காப்பதற்காக, அவர்களுக்கு ஊதியத்துடன் கூடிய பேறுகால விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த விடுப்பு ஒவ்வொரு காலத்துக்கும் ஏற்றவாறு அதிகரித்து வழங்கப்பட்டுக் கொண்டே வருகிறது. தனியார் நிறுவனங்களும் பேறுகால விடுப்பை தங்களது பெண் ஊழியர்களுக்கு வழங்கி வருகின்றன. அந்த வகையில், மகப்பேறு சட்டம் 1961இன் கீழ் பணிபுரியும் பெண்ணுக்கு ஆறு மாதங்கள் அல்லது 26 வாரங்கள் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்புக்கு உரிமை உண்டு.

தமிழ்நாட்டை பொறுத்தவரை அரசு பணியில் உள்ள மகளிருக்கு பேறுகால விடுப்பு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. 1980 ஆண்டு முதல் 90 நாட்கள் அதாவது 3 மாதங்கள் என்றிருந்த மகப்பேறு விடுப்பு கடந்த 2011ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்த  ஜெயலலிதா 6 மாதங்களாக உயர்த்தினார். இதன்பிறகு இந்த பேறுகால விடுப்பு 9 மாதமாக உயர்த்தப்பட்டது. இதனையடுத்து ஆட்சி பொறுப்புக்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு 9 மாதமாக இருந்த பேறுகால விடுப்பை 12 மாதங்களாக உயர்த்தி அதற்கான அரசாணை சமீபத்தில் வெளியிட்டது.

இந்த நிலையில், தாய்மையின் முக்கியத்துவத்தை உணர்ந்து சிக்கிம் மாநில பெண் அரசு ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய ஓராண்டு பேறுகால விடுப்பு வழங்கப்படும் என அந்த மாநில முதலமைச்சர் பிரேம்சிங் அறிவித்துள்ளார்.

அதேபோல், அரசுப் பெண் ஊழியர்களின் கணவர்கள் அரசுப் பணியில் இருந்தால் அவர்களுக்கு 1 மாதம் விடுப்பு வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

சிக்கிம் மாநில சிவில் சர்வீஸ் அதிகாரிகள் சங்கத்தின் ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய போது இந்த அறிவிப்பினை வெளியிட்ட அவர், இந்த அறிவிப்பு விரைவில் அமலுக்கு வரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் பெண் அரசு ஊழியர்களுக்கு இந்த பலனை வழங்கும் வகையில் சேவை விதிகளில் மாற்றங்கள் செய்யப்படும் என்றும், இந்த நடவடிக்கை அரசு ஊழியர்கள் தங்கள் குழந்தைகளையும், குடும்பத்தையும் சிறப்பாகக் கவனித்துக் கொள்ள உதவும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.