சேலம் இரட்டை கொலை வழக்கில் ஒருவர் கைது!

சேலம் சூரமங்கலம் பகுதியில் முதிய தம்பதி கொலை செய்யப்பட்ட வழக்கில், பீகார் மாநிலத்தை சேர்ந்த சந்தோஷ் என்பவர் கைது…

சேலம் சூரமங்கலத்தை அடுத்த ஜாகீர் அம்மாபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கரன் (65). இவர், தனது வீட்டின் ஒரு பகுதியில் மளிகைக் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி வித்யா (60). இந்நிலையில் நேற்று மதியம் பாஸ்கரனும், வித்யாவும் வீட்டில் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர்.

இதைக் கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். போலீஸார் அங்கு சென்று பார்த்தபோது, வித்யா உயிரிழந்து கிடந்தார். பலத்த காயத்துடன் இருந்த பாஸ்கரனை போலீஸார் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

முதல் கட்ட விசாரணையில் இருவரும் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. வித்யா அணிந்திருந்த நகைகள் மாயமாகி இருப்பது தெரிய வந்தது. எனவே. இருவரும் நகைக்காக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்து. கொலையாளிகளைத் தேடி வருந்தனர்.

இந்த நிலையில், முதியவர்களை கொலை செய்தது அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ் என்பது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர். அந்த பகுதியில் தங்கியிருந்து பணிபுரிந்து வருகிறார். கடன் பிரச்சினை காரணமாக இருவரையும் அடித்து கொலை செய்ததாகவும், அவர்களிடம் இருந்து 10 சவரன் செயினை எடுத்துச் சென்றதாகவும் சந்தோஷ் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். அவரிடம் போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.