“21ம் நூற்றாண்டின் முக்கிய முடிவுகளில் ஒன்று மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா” – பிரதமர் நரேந்திர மோடி உரை!

நூற்றாண்டிற்கான மிகச்சிறந்த தருணம் என்றால் அது பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதாவை கொண்டு வந்ததுதான் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற மகளிர் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, “21ம் நூற்றாண்டின் முக்கிய முடிவுகளில் ஒன்று மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா. இந்த நடவடிக்கை மூலம் ஒரு புதிய அத்தியாயம் தொடங்க உள்ளது. இந்த நூற்றாண்டிற்கான மிகச்சிறந்த தருணம் என்றால் அது பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதாவை கொண்டு வந்தது தான். இந்த முடிவு நாட்டின் அசைக்க முடியாத சக்தியான பெண்கள் சக்திக்கு அர்ப்பணிக்கப்படுகின்றது. பெண்களுக்கான முக்கியத்துவம் மற்றும் அதிகாரம் அளிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. நாம் வரலாற்றை எழுதும் காலகட்டத்தில் இருக்கிறோம். நாம் எடுத்துள்ள இந்த முயற்சியை வெற்றிகரமாக நிறைவேற்றி முடிக்க நாட்டின் கோடிக்கணக்கான பெண்களின் ஆசீர்வாதம் எனக்கு தேவைப்படுகிறது.

21ம் நூற்றாண்டிற்கான மிகச்சிறந்த முடிவாக பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா அமல்படுத்தப்பட உள்ளது. இந்த வரலாற்று சிறப்புமிக்க விஷயத்தை படைக்கும் இறுதிக்கட்டத்தில் இந்திய நாடாளுமன்றம் இறங்கி இருக்கிறது. நீதி வழங்குவது என்பது வெறும் வார்த்தை முழக்கம் மட்டுமல்ல அது செயல்பாட்டில் கொண்டு வருவது. இந்தியாவின் பணி சூழல்களிலும் சமூக நீதி என்பது செயல்படுத்தப்பட வேண்டும். இந்த மசோதா ஒட்டு மொத்த நாட்டின் வடிவமைப்பையும் மாற்றப் போகிறது.

இந்த மசோதாவை கொண்டு வர ஒட்டுமொத்த இந்தியாவும் ஒரே குரலில் இணைந்து நிற்கிறது. எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பும் இந்த விவகாரத்தில் தேவைப்படுகிறது. அதனால் தான் அவர்களுக்கு நானே தனிப்பட்ட முறையில் கடிதங்களை எழுதி இருக்கிறேன். 40 ஆண்டு கால இந்தியர்களின் கனவு நிறைவேற உள்ளது. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு கட்சிகளும் ஒவ்வொரு தருணத்தில் இந்த மசோதாவுக்காக உழைத்திருக்கிறார்கள், நான் அவர்களை குறைத்து மதிப்பிடவில்லை. பெண்களுக்கான கனவுகளுக்கு புதிய சிறகுகள் கொடுப்பதுதான் இந்த மசோதாவின் முக்கிய அம்சம். இந்திய முன்னேற்றத்திற்கு பெண்களின் சக்தி என்பது அளவிடவே முடியாதது. குடியரசுத் தலைவர், நிதி அமைச்சர் என பல்வேறு முக்கிய பொறுப்புகளை மகளிர் திறம்பட கையாள்கின்றனர்.

14 லட்சம் மகளிர் உள்ளாட்சி அமைப்புகளில் பொறுப்புகளை நிர்வகிக்கிறார்கள். தான் குஜராத் மாநிலத்தின் முதல்வராக பொறுப்பேற்ற காலத்தில் தனக்கு பெரிய அளவில் அனுபவங்கள் இல்லாமல் இருந்ததாகவும், அப்பொழுது ஒரு சாதாரண கிராமத்தின் பஞ்சாயத்து தலைவர் மற்றும் அவருக்கு கீழ் செயல்படும் பெண்கள் குழு வந்து தன்னை சந்திக்க நேரம் கேட்டார்கள். அந்த பஞ்சாயத்தில் முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே இருந்தனர். அது எப்படி சாத்தியமானது என ஆச்சரியமாக அதிகாரிகளிடம் கேட்டபோது, அந்த பெண்கள் அதிகாரங்களுக்கு வர வேண்டும் என்பதற்காக அந்த கிராமத்தின் ஆண்கள் தேர்தலில் போட்டியிடாமல் இருந்திருக்கிறார்கள் என்று அதிகாரிகள் சொன்னார்கள். எனக்கு மிகவும் ஆச்சரியமாக போனது அவர்களை சந்திக்க நேரம் ஒதுக்கினேன்.

அவர்கள் வந்து என்னை சந்தித்தபோது அவர்களிடம் உங்களுக்கு என்ன வேண்டும், நீங்கள் மனு எதையும் எடுத்து வரவில்லையே, என்று நான் கேட்டேன். நீங்கள் புதிதாக முதல்வராக வந்திருக்கிறீர்கள். அதனால் உங்களைப் பார்த்துவிட்டு வாழ்த்து சொல்லி விட்டு செல்லலாம் என்று வந்தோம் என்று சொன்னார்கள். சரி நீங்கள் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு பஞ்சாயத்து தலைவராக உங்கள் கிராமத்தில் இருக்கப் போகிறீர்கள். உங்களுடைய திட்டம் என்ன என்று கேட்டேன். வழக்கமான நபர்களாக இருந்தால் பள்ளிக்கூடம் கட்டுவேன், மருத்துவமனை கட்டுவேன், சாலை போடுவேன் என்று சொல்லியிருப்பார்கள். ஆனால் அந்தப் பெண்மணி சொன்ன பதில் எனக்கு இன்றும் அப்படியே நினைவில் இருக்கிறது.

எந்த அர்த்தசாஸ்திரத்திலும் அப்படி ஒரு கூர்மையான பதிலை நான் படித்திருக்கவில்லை. அதை இப்பொழுதும் என் மனதில் ஓடிக்கொண்டே இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் நான் முதல்வராகவும், பிரதமராகவும் வந்ததற்கு ஒரு வகையில் அந்த பதிலும் காரணம். அந்த பதிலை தான் நான் செயல்படுத்த வேண்டும் என்று தொடர்ச்சியாக நினைத்துக் கொண்டே இருந்தேன். அந்த பதில் ரொம்பவும் எளிமையானது. என் கிராமத்தில் ஏழைகள் யாரும் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்று அந்த தலைவர் சொன்னார். அதைத்தான் நான் முதல்வராக இருந்த போதும் சரி பிரதமராக வந்த போதும் சரி செய்து கொண்டிருக்கிறேன் என்று உணர்ச்சி வசப்பட்டு” கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.